பருவ நிலை மாற்றத்தால் அனைத்து நாடுகளும் பாதிப்பு ; பிரதமர் நரேந்திர மோடி
பருவ நிலை மாற்றம் வளர்ந்த நாடுகள், இயற்கை வளம் மிக்க நாடுகள் என அனைவருக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் பருவ நிலை மாற்றம் தொடர்பான மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் சிறு தீவுகள் உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான திட்டத்தை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இதனை அடுத்து உரையாற்றிய பிரதமர் மோடி, பருவ நிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் தீவுப் பகுதிகளில் உள்கட்டமைப்பு தொடங்குவது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
வளர்ந்த நாடுகள், இயற்கை வளம் மிகுந்த நாடுகளுக்கும் பருவநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளதாக குறிப்பிட்டார். பருவநிலை மாற்றத்தால் சிறிய தீவுகள் பெரிதும் பாதிப்புக்குள்ளானதாகவும், அங்கு மக்கள் வாழ்வதற்கு சவாலான சூழலாக மாறி உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமாக இஸ்ரோ, சிறு தீவுகளின் நலனுக்காக சிறப்பு தரவு தளத்தை உருவாக்கி வருவதாக குறிப்பிட்ட பிரதமர், அதன் மூலம் புயல், கடலோரப் பகுதிகள், பவளப் பாறை கண்காணிப்பு தொடர்பான தகவல்கள் வழங்கப்படும் என கூறினார்.
இதனை அடுத்து இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னெட், நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா, உக்ரைன் அதிபர் வோலோடைமைர் செலன்ஸ்கி ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர், பொருளாதார மேம்பாடு, பருவ நிலை தொடர்பாக விவாதித்தார்.
Comments