பருவநிலை மாற்றம் தொடர்பான ஐநா மாநாடு.... பிரதமர் மோடி, ஜோ பைடன் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்பு...
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான உலகத் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஐ.நா.வின் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும், ஐ.நா. பொதுச்செயலர் அன்டானியோ குட்டரசும் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பிரிட்டன் இளவரசர் சார்லஸ், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
மாநாட்டில் பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பசுமைத் தொழில் புரட்சிக்கு வளர்ந்த நாடுகள் பொறுப்பேற்றுத் தேவைப்படுவோருக்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
பசுமைத் தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்குப் பிற நாடுகளுக்கு ஏழரை இலட்சம் கோடி ரூபாய் வழங்குவதாகத் தொழில்வளமிக்க நாடுகள் உறுதியளித்ததாகவும், அதை இன்னும் வழங்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மாநாட்டில் பேசிய ஐ.நா.பொதுச்செயலர் அன்டானியோ குட்டரஸ், பருவநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் உடன்பாட்டுக்குப் பிந்தைய ஆறாண்டுகள் அதிக வெப்பமுள்ள ஆண்டுகளாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார். புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டை நாம் நிறுத்தாவிட்டால், நம்மை அது நிறுத்திவிடும் எனத் எச்சரித்தார்.
முன்னதாகப் பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன்வாழ் இந்தியர்களையும், இந்தியச் சமூகம் குறித்து ஆராய்ச்சி செய்யும் இந்தியவியலாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பருவநிலை மாற்றம் இந்தியாவுக்கு சவாலாக இருப்பதாக கூறினார். வளர்ச்சிக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மக்களுக்கு பயனளிப்பதோடு, அவர்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பல பாரம்பரிய சமூகங்கள் இயற்கையோடு இயைந்து வாழும் அறிவு பெற்றுள்ளதைக் குறிப்பிட்ட மோடி, இந்த அறிவு அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லப்படுவதை உறுதிசெய்ய, அதை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
Comments