வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.. பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியலைத் தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார். ஜனவரி முதல் நாளைத் தகுதிநாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்தோரும், வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டோரும் பெயர்களைச் சேர்க்க இம்மாதத்தில் 4 நாள் நடைபெறும் சிறப்பு முகாம்களிலும், இணையவழியிலும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 28 இலட்சத்து 94 ஆயிரத்து 531 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களைவிடப் பெண் வாக்காளர்கள் பத்தரை இலட்சம் பேர் அதிகமுள்ளனர்.
தமிழகத்திலேயே அதிகமாகச் செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர்ச் சட்டமன்றத் தொகுதியில் 7 இலட்சம் வாக்காளர்கள் உள்ளனர். சென்னைத் துறைமுகம் தொகுதியில் குறைந்த அளவாக ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 679 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, பெயரை வேறு முகவரிக்கு மாற்றத் தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் நவம்பர் 13, 14, 27, 28 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
நிரப்பிய விண்ணப்பங்களை அங்குள்ள அலுவலர்களிடம் வழங்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முகவரிச் சான்றாக பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வங்கி பாஸ்புக், குடும்ப அட்டை, வாடகை ஒப்பந்தப் பத்திரம் உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை இணைக்க வேண்டும்.
வயதுக்கான சான்றாகப் பிறப்புச் சான்று, மதிப்பெண் சான்று, பான், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார் ஆகியவற்றில் ஒன்றின் நகலை வழங்க வேண்டும். 25 வயதுக்கு உட்பட்டோர் வயதுச் சான்றை இணைக்க வேண்டியது கட்டாயம். பெயர் சேர்க்க, திருத்த, பெயரை வேறு முகவரிக்கு மாற்ற இணைய வழியிலும் விண்ணப்பிக்கலாம்.
முகவரி மாற்றம், திருத்தம் செய்தோரும், வாக்காளர் அட்டையைத் தொலைத்தவர்கள் புதிய அட்டை பெறவும் வட்டாட்சியர் அலுவலகங்கள், மண்டல அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.
Comments