கோழிகளுக்காக அமைத்த மின்வேலி... முதிய தம்பதியின் உயிரைப் பறித்த சோகம்
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே கோழித் திருட்டைத் தடுக்க முதியவர் அமைத்த மின்வேலி, அவர் உயிரையும் அவரது மனைவி உயிரையும் சேர்த்து பறித்துள்ளது. பண்ணைகள், விவசாய நிலங்கள், தோட்டங்கள் உள்ளிட்டவற்றை பாதுகாக்க சட்டவிரோதமாக அமைக்கப்படும் மின்வேலிகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதற்குச் சாட்சியாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கெட்டிசெவியூர் அரளிமலை பிரிவை சேர்ந்த விவசாயியான ஆண்டியப்பன், தனது வீட்டின் அருகே குடிசை அமைத்து 40க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகளையும் வளர்த்து வந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் ஆண்டியப்பன் வளர்த்து வந்த கோழிகளில் இரண்டை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து குடிசையைச் சுற்றி மின்வேலி அமைத்த ஆண்டியப்பன், அதுகுறித்து மனைவி முனியம்மாளிடம் தெரிவிக்காமல் விட்டிருக்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை காலை அங்கு மின் இணைப்பு இருப்பது தெரியாமல் கோழிகளுக்குத் தீவனம் வைப்பதற்காகச் சென்ற முனியம்மாள், மின்சாரம் தாக்கி அலறியுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த ஆண்டியப்பன் மனைவியை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து இருவருமே உயிரிழந்தனர்.
பொதுவாக பயிர்களைப் பாதுகாக்க விவசாய நிலங்களிலும், கால்நடைகளைப் பாதுகாக்கிறேன் என பண்ணைகளிலும் சிலர் இதுபோன்ற மின்வேலிகளை அமைத்து வருகின்றனர்.
அது சட்டவிரோதம் என்பதோடு, மிக ஆபத்தானதும் கூட என்கின்றனர் மின்னியல் வல்லுனர்கள். ஆண்டியப்பன் அமைத்த மின்வேலியில் சிக்கி கோழி திருட வந்தவன் இறந்திருந்தாலும் அவருக்கு சட்டம் தண்டனையை வழங்கி இருக்கும்.
அதேநேரம் ஆண்டியப்பனின் மகன், மருமகள், பேரக் குழந்தைகள் என ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்களில் ஒருவரே கூட மின் வேலி குறித்து தெரியாமல் சென்றிருந்தால் மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்பாக அமைந்திருக்கும் என்கின்றனர் போலீசார்.
பயிர்களை விலங்குகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்றால், உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தாத வகையிலான சோலார் மின் வேலிகளை அமைக்கலாம் என்றும் பண்ணைகளில் திருட்டு உள்ளிட்டவற்றைத் தடுக்க, சிசிடிவி கேமராக்கள், அலாரம் உள்ளிட்டவற்றைப் பொருத்தலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். அதனைவிடுத்து, இதுபோன்ற மின் வேலிகளை அமைப்பது பல்வேறு ஆபத்துகளைக் கொண்டு வரும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
Comments