இனி பனைமரம் ஏறுவது ரொம்ப ஈசிப்பா..! பெண்கள் ஏறவும் பயிற்சி!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பனை தொழில் அழிவதை தடுக்கும் பொருட்டு பெண்களுக்கும், எளிதாக பனைமரம் ஏறும் பயிற்சி அளிக்கப்பட்டது. ஊர் கூடி பனையேறிய உற்சாக பயிற்சி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டோரின் பயன்பாட்டால் நாளுக்கு நாள் கருப்பட்டியின் தேவை அதிகரித்து வருகின்றது. பனையில் இருந்து பதநீரை இறக்குதல் என்பது எல்லோராலும் எளிதில் செய்யக்கூடிய காரியமில்லை என்பதாலும் பனைத்தொழில் நழிவடைந்து வருகின்றது.
வேரில் இருந்து ஓலை வரை பனையின் அத்தனையும் மனிதனுக்கு பயன்தருவதால் கற்பகதரு என்றழைக்கப்படும் பனைமரத்தில் ஏறுவதற்கு எளிய முறையை கண்டு பிடித்துள்ள வெங்கட் என்பவர், தனது கண்டுபிடிப்பை எடுத்துச்சென்று ஊர் ஊராக அனைவருக்கும் எளிதாக பனையேற பயிற்சி அளித்து வருகின்றார். அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கடகுளம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு பனை மரத்தில் ஏற சிறப்பு கருவி கொண்டு பயிற்சி அளித்தார்.
எளிதாக பனையேற உதவும் கருவியின் செயல்பாட்டை பார்ப்பதற்கு அந்த ஊரில் உள்ள ஆண்கள், பெண்கள் சிறுவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி ஊர் மக்கள் திரளாக கூடினர். அந்த கிராமத்தில் கம்பீரமாய் வளர்ந்து நின்ற பனை மரம் ஒன்றில் அவர் கொண்டு வந்திருந்த கருவியை பயன்படுத்தி உற்சாகத்துடனும் புத்துணர்ச்சியுடன் ஏறுவதற்கு பயிற்சி அளித்தார்
பயிற்சியாளர் வெங்கட் சொன்ன அறிவுரைகளை ஏற்று சிலர் தைரியத்துடன் முக எளிமையாக பனை மரத்தில் ஏறினர்.முதலில் எப்படி ஏறுவது என்று வெங்க சொல்லி கொடுத்ததால் தயக்கமின்றி பனையில் ஏறி இறங்கினர்
இதனை கண்டு உற்சாகம் அடைந்த அதே ஊரைச் சேர்ந்த ஸ்டெபி என்ற இளம்பெண் பனை மரத்தில் ஏறி பயிற்சி எடுத்தார். அப்போது அவரை அப்பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் பொதுமக்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
பனையில் ஏறும் போது தவறி விழுந்து விடாமல் இருப்பதற்கு அந்த கருவியுடனேயே பெல்ட் ஒன்று பொருத்தப்பட்டிருந்ததால் அந்தப்பெண் அஞ்சாமல் பனை ஏறி அசத்தினார்.
கடகுளம் பகுதி முழுவதும் உள்ள ஊர் மக்கள் ஒன்று திரண்டு வீர தீர சாகசங்களை கண்டு ரசிப்பது போல பிரமிப்புடன் கலந்து கொண்டனர். பனைத்தொழிலும் மற்ற மரங்கள் வளர்ப்பது போன்ற வருமானம் மிக்க விவசாயம் என்பதையும் இந்த தொழில் ஒன்றும் இழிவானது அல்ல என்பதையும் சமூகத்துக்கு உரக்க சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது.
Comments