கன்னட சூப்பர் ஸ்டாருக்கு கண்ணீர் அஞ்சலி.. குவியும் ரசிகர்கள்..!
மாரடைப்பு காரணமாக உயிரிழந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் உடலுக்கு நடிகர் நடிகைகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், அவரது உடல் வைக்கப்பட்டுள்ள கண்டீரவா மைதானத்துக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.
கன்னட திரை உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த மறைந்த நடிகர் ராஜ்குமாரின் இளைய மகனான புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார். 46 வயதில் அவரது இழப்பு கன்னட திரையுலகினரிடையேயும் ரசிகர்களிடையேயும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இறப்புக்குப் பின் தனது கண்களையும் தானம் செய்து, ஒட்டுமொத்த தேசத்தையும் உருகவைத்துச் சென்றுள்ளார் புனித் ராஜ்குமார்....
பெங்களூரு கண்டீரவா உள்விளையாட்டு அரங்கில் வைக்கப்பட்டுள்ள புனித் ராஜ்குமாரின் உடலுக்கு கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் பிரபு தேவா, தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, நடிகர் வெங்கடேஷ், நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்டோரும் புனீத் ராஜ்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் தேவேகவுடா தனது வீட்டில் தொலைக்காட்சியில் புனித் ராஜ்குமார் நடித்த பழைய படங்களை பார்க்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது.
புனித் ராஜ்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டீரவா விளையாட்டு அரங்கை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
இதனிடையே புனித் ராஜ்குமாரின் இறப்புச் செய்தி கேட்டு பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ரசிகரும் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ஒரு ரசிகரும் மாரடைப்பால் உயிரிழந்தனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சனிக்கிழமையே புனித் ராஜ்குமாரின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனத் தெரிவித்திருந்த நிலையில், ரசிகர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனித் ராஜ்குமாரின் பெற்றோரான ராஜ்குமார் மற்றும் பார்வதம்மா ராஜ்குமார் ஆகியோரின் நினைவிடங்களுக்கு அருகிலேயே அவரது உடலையும் நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
Comments