ரூ.3 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை சாமி சிலைகளாக வடிவமைத்து வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சி
சென்னை மணலியில் பல கோடி ரூபாய் பதிப்புள்ள செம்மரக்கட்டைகளை சாமி சிலைகளாக வடிவமைத்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற சகோதரர்கள் இருவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
மணலி பார்த்தசாரதி தெருவில் உள்ள அலுமினிய குடோனை மண்ணடியை சேர்ந்த முகமது மற்றும் அவரது சகோதரர் சையது ஆகியோர் வாடகைக்கு எடுத்துள்ள நிலையில், அங்கு செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவை வெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருப்பதாகவும் நுண்ணறிவு மற்றும் புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனத்துறையினர் மற்றும் மணலி கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் குடோனை சோதனையிட்டதில், சுமார் 3 டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
மேலும் செம்மரக்கட்டைகளை வெளிநாடுகளுக்கு கடத்துவதற்கு ஏதுவாக அவற்றை விநாயகர் உள்ளிட்ட சாமி சிலைகளாக வடிவமைத்து வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள வனத்துறையினர் தலைமறைவான சையது மற்றும் அவரது சகோதரர் முகமதுவை தேடி வருகின்றனர்.
Comments