ரோமுக்குச் சென்றார் பிரதமர் மோடி... இத்தாலிய அதிகாரிகள் வரவேற்பு
ஜி 20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி தலைநகர் ரோமுக்குச் சென்றடைந்தார். இத்தாலிய அதிகாரிகள் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
ஜி 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு ரோமில் அக்டோபர் 30, 31 ஆகிய இரு நாட்களில் நடைபெறுகிறது. இந்த அமைப்பில் இந்தியாவும் உறுப்பினர் என்பதால் அதில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி ரோமுக்குச் சென்றடைந்தார்.
விமான நிலையத்தில் இத்தாலிய அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.
ஜி 20 மாநாட்டின் இடையே இத்தாலி பிரதமர் மரியோ டிராகியுடன் இருநாட்டு உறவுகள் குறித்தும் பிரதமர் மோடி பேச்சு நடத்த உள்ளார்.
ரோமில் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மிக்கேல், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா ஆகியோருடன் நடைபெற்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார்.
ரோம் நகரில் பியாசா காந்தி என்னுமிடத்துக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலி வாழ் இந்தியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அங்கு சதுக்கத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்குப் பிரதமர் மோடி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தியபின் அங்குக் கூடியிருந்த இத்தாலிவாழ் இந்தியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
Comments