ஆப்பே உனக்காக... சீரியல் ரசிகைக்கு மெகா பல்பு... ரூ 2 ½ லட்சம் பறிகொடுத்தார்..!

0 7681

பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடிப்பதாக கூறி முகநூலில் பழகி பட்டாதாரி பெண்ணிடம் இரண்டரை லட்சம் ரூபாயை பறித்த ஆசாமியை காவல்துறையினர் கைது செய்தனர். பூவே உனக்காக சீரியலை நம்பி போலி முகநூல் தம்பதியிடம் ஏமாந்த வட்டிக்கடைக்காரர் மகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த பைனான்ஸியரின் மகள் ஒருவர் தீவிர மெகா சீரியல் ரசிகை. பட்டதாரி பெண்ணான இவர் வேலைக்கு செல்லாமல், டிவியில் வெளியாகும் மெகா சீரியல்களை இரவிலும், மறு ஒளிபரப்பு செய்தால் அதனை பகலிலும் பார்ப்பதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.

மீதமுள்ள நேரங்களில் முகநூலில் நண்பர்களுடன் சாட்டிங்கில் ஈடுபடுவது என்று பொழுதை உபயோகமின்றி கழித்து வந்துள்ளார்.

அந்தவகையில் அந்தப்பெணுக்கு, தனது Facebook-ல் முகமத் ஆசிம் என்ற Facebook_ கணக்கில் இருந்து பிரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்த நபர், தன்னை பூவே உனக்காக சீரியல் நடிகர் என்று குறிப்பிட்டிருந்ததை நம்பி அந்த நட்பு அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். பின்பு முகநூல் மெசேஞ்சரில் தன்னுடைய வாட்ஸ்அப் மொபைல் எண்ணை கொடுத்து இருவரும் ஒரு மாத காலமாக பேசி வந்துள்ளனர்,

பிரபல சேனலில் பூவே உனக்காக என்ற சீரியலில் நடித்து வருவதாக கூறி வந்த அந்த நபர், அப்பெண்ணை காதலிப்பதாக கூறி தினமும் போனில் மணிக்கணக்கில் பேசியுள்ளார். மேலும் தன்னுடன் நடிக்கும் சீரியல் நடிகை என வேறொரு பெண்ணையும் பேசவைத்துள்ளார். சீரியல் நாயகிகள் தன்னுடன் நட்பாக பேசுகிறார்கள் என்று அந்த பெண் மகிழ்ச்சியில் குதூகலித்துள்ளார்.

சீரியல் நடிகர் என்று கூறிய நபர், அண்மையில் தனது தாய்க்கு உடல் நலம் சரியில்லை அவசரமாக தனக்கு பண உதவி தேவைப்படுகின்றது என்று செண்டிமெண்டாக பேசியுள்ளார். பைனான்ஸ் விடுவதற்காக வைத்திருந்த பணத்தை தந்தைக்கு தெரியாமல் எடுத்த அந்தப்பெண், 3 தவணைகளாக இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை வங்கி கணக்கு மூலம் அவருக்கு அனுப்பி வைத்திருக்கின்றார் .

அதன் பின்னர் முகநூல் காதலனிடம் தான் நேரில் பார்க்க வேண்டும் என்று அந்தப்பெண் உருகி உருகி பேசிய நிலையில் 2 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுக்கொண்ட காதலனோ, அந்தப்பெண்ணிடம் பேசுவதை தவிர்க்க மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு கம்பி நீட்டி உள்ளான்.

சந்தேகம் அடைந்த அந்த பெண், தான் பணம் கொடுத்து ஏமாந்த விவரத்தை தந்தையுடன் தெரிவிக்க அவர் மதுரை மாவட்ட சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல் துறையினர் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். வங்கி கணக்கு விவரத்தை வைத்து அந்தப்பெண்ணிடம் சீரியல் நடிகர் என்று ஏமாற்றி பணாம் பெற்ற நபர், சென்னை திருவொற்றியூரை சேர்ந்த சந்தோஷ் ராஜா என்பதும் அந்த பெண்ணிடம் சீரியல் நாயகி என பேசி ஏமாற்றியது சந்தோஷ் ராவின் மனைவிசித்ரா ஆகியோரை கைது செய்தனர்.

முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போலியான முகவரியுடன் சுற்றும் பேக் ஐடிகளை உண்மை என்று நம்பி பழகி குடும்ப விவரங்களை கூறுவது தவறு, அதிலும் பணப்பறிமாற்றம் மேற்கொண்டால் இது போன்ற மோசடியில் சிக்க நேரிடும் என்று பல்பு வாங்கிய பெண்ணை போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

பணம் பறிப்பதற்காண எளிய வழியாக தற்போது முக நூல் சாட்டிங்க்கை சீட்டிங் சின்னப்பாக்கள் பயன்படுத்தி வருவதால், முகநூல் முத்தம்மாக்கள் கவனத்துடன் இல்லாவிட்டால் பணத்தை பறிகொடுத்துவிட்டு முச்சந்தியில் நிற்க வேண்டிய நிலை ஏற்ப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments