போதைப்பொருள் வழக்கில், நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன்
போதைப் பொருள் வழக்கில் சிறையில் உள்ள ஆர்யன்கான் உட்பட மூவருக்கும் மும்பை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. மும்பையில் இருந்து கோவாவுக்குச் சென்ற சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக அக்டோபர் இரண்டாம் நாள் இரவில் 8 பேரைப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பினர் பிடித்து விசாரித்தனர்.
மாதிரிகளைச் சோதித்தபின் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சண்ட், மூன்முன் தமேச்சா ஆகிய மூவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மும்பை ஆர்தர் சாலைச் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கை விசாரிக்கும் மும்பை சிறப்பு நீதிமன்றம் மூவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதையடுத்து ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீதான விசாரணை மூன்று நாட்களாக நடைபெற்றது.
ஆர்யன் கானுக்காக ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, இளைஞரான ஆர்யன் கானை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்ப வேண்டுமே தவிரச் சிறைச்சாலைக்கு அல்ல என வாதிட்டார். இதையடுத்து மூவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
ஜாமீன் நிபந்தனைகளுடன் கூடிய விரிவான உத்தரவு நாளை வழங்கப்படும் என்றும், வெள்ளி அல்லது சனிக்கிழமை மூவரும் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவர் என்றும் முகுல் ரோகத்கி தெரிவித்தார்.
Comments