கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கும் வரை நகைகளை உருக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கக் கூடாது... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கும் வரை நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது என தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கிக் கட்டிகளாக மாற்றும் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விதிகளின்படி, கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில் தங்க நகைகளை உருக்க அனுமதிக்கக் கூடாது என மனுதாரர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கோவில் நகைகளை உருக்கவில்லை என்றும், காணிக்கையாக வந்த நகைகள் தான் உருக்கப்படுவதாகவும், அதை மேற்பார்வையிட நீதிபதிகள் அடங்கிய குழு அமைத்துள்ளதாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அறங்காவலர்கள் இல்லாமல் நகைகளை உருக்க முடியாது எனக் கூறினர். இதையடுத்து, நகைகளைக் கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவித்த அரசு வழக்கறிஞர், கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்ட பிறகே நகைகள் உருக்கப்படும் என உறுதியளித்தார்.
Comments