தமிழ்நாட்டுக்கு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா ஒதுக்கீடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்திற்கு 90ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரம் ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக வேளாண் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் 7.816லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நடப்பு இராபி பருவத்தில் நெல் மற்றும் இதர பயிர்களான சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், கரும்பு, பருத்தி ஆகியவை உட்பட மொத்தமாக 24.829லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப் படுவதாகவும், இதன் காரணமாக யூரியா மற்றும் டி.ஏ.பி. உள்ளிட்ட அனைத்து வகை உரங்களின் தேவை அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விவசாய பணிகளுக்கு தட்டுப்பாடின்றி மானிய உரங்கள் கிடைக்க வழிவகை செய்திடவும், தமிழகத்தின் உரத்தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மத்திய ரசாயனத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 21-ந் தேதி கடிதம் எழுதியிருந்தார். அதில், யூரியாவை உரிய காலத்தில் வழங்கிடவும், 20ஆயிரம் மெட்ரிக் டன் டி.ஏ.பி., 10ஆயிரம் மெட்ரிக் டன் பொட்டாஷ் உரத்தை கூடுதலாக ஒதுக்கீடு செய்யவும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று காரைக்கால் துறைமுகத்திற்கு வரவுள்ள 90ஆயிரம் மெட்ரிக் டன் இறக்குமதி யூரியாவை தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் தனியார் மற்றும் சில்லறை உர விற்பனை நிலையங்களில் 64,111 மெட்ரிக் டன் யூரியாவும், 23,654மெட்ரிக் டன் டி.ஏ.பி.யும், 35,590 மெட்ரிக் டன் பொட்டாஷும், 1,17,575 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரமும் கையிருப்பில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments