பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து - வெடித்துச் சிதறிய பட்டாசுகள்

0 3020
பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து - வெடித்துச் சிதறிய பட்டாசுகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 

சங்கராபுரத்தில் இருந்து கள்ளகுறிச்சி செல்லும் சாலையில் செல்வம் என்பவர் தீபாவளியை முன்னிட்டு பட்டாசுக் கடை அமைத்திருந்தார். இந்த பட்டாசுக் கடையில் இரவு 7 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு, பட்டாசுகள் வெடித்துச் சிதறத் தொடங்கின. பெரும் சப்தத்துடன் பட்டாசுகள் வெடித்து, பல அடி உயரத்துக்கு தீப்பிழம்புகள் எழுந்தன.

பட்டாசுக் கடையை ஒட்டியவாறு இருந்த பேக்கரியில் வைக்கப்பட்டிருந்த 10 சிலிண்டர்களில் 4 சிலிண்டர்கள் வெடித்துச் சிதறின. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். முன்னதாக சிலிண்டர்கள் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக வெடித்ததால், அருகில் செல்ல முடியாத நிலையில், தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இந்த கோர விபத்தில் பட்டாசுக் கடை மற்றும் பேக்கரியில் இருந்த 5 பேர் உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இறப்பு விகிதம் அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. விபத்தின்போது பட்டாசுக் கடைக்கு எதிரிலிருந்த தனியார் வங்கி ஏடிஎம்மின் கண்ணாடிகள் உடைந்து சிதறிய நிலையில், அருகருகே இருந்த துணிக்கடை உள்ளிட்ட மேலும் 3 கடைகளிலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பட்டாசுக் கடையை ஒட்டியவாறு ஐயங்கார் பேக்கரி என்ற பெயரில் இனிப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. தீபாவளி சீசன் என்பதால் அங்கு இனிப்பு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. பட்டாசுக் கடைக்கும் பேக்கரிக்கும் இடையில் ஒரு சுவர் மட்டுமே உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அந்த வெப்பத்தின் காரணமாகவோ அல்லது தீப்பொறி பட்டோ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பட்டாசுக் கடை தீ விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்குத் தலா 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே சம்பவம் நடந்த இடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரையும் நேரில் சந்தித்து அமைச்சர் எ.வ.வேலு ஆறுதல் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments