ஸ்வீட் கடையில் விற்பனை செய்யப்பட்ட பக்கோடாவில் இறந்து கிடந்த பல்லி..!
நெல்லை பாளையங்கோட்டையில், ஸ்வீட் கடையில் விற்பனை செய்யப்பட்ட பக்கோடாவில் பல்லி இறந்து கிடந்ததாக புகார் எழுந்த நிலையில், கடையில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பலகாரங்களை ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.
தெற்கு பஜாரில் இயங்கி வரும் ஸ்ரீராம் லாலா கடையில் விற்பனை செய்யப்பட்ட பக்கோடாவில் பல்லி இறந்துகிடந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் சமூக வலைதளத்தில் வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டார்.
இது வைரலானதை அடுத்து கடையில் சோதனையிட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திறந்த வெளியில் விற்பனைக்காக வைத்திருந்த இனிப்பு வகைகளை கீழே கொட்டி அழித்ததோடு, சிலவற்றை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.
மேலும் கடையை சுத்தப்படுத்த உத்தரவிட்ட அதிகாரிகள், 24 மணி நேரத்திற்கு பிறகு மறு ஆய்வு செய்த பின்னரே கடையை திறக்க வேண்டும் என கூறிச் சென்றனர். இதனிடையே பக்கோடாவில் பல்லி விழுந்ததாக குற்றம்சாட்டிய வாடிக்கையாளர் தன்னிடம் 20 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக ஸ்வீட் கடை உரிமையாளர் மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
Comments