ஒரே நேரத்தில் 9 புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
உத்தரப்பிரதேசத்தின் பூர்வாஞ்சலில் ஒன்பது புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடக்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, ஏழைகளின் பணத்தைச் சேமிக்கவும் அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்துகொடுக்கவும் தமது அரசு முன்னுரிமை அளித்து வருவதாகத் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசத்தில் பூர்வாஞ்சல் எனப்படும் கிழக்கு மண்டலத்தில் 9 புதிய மருத்துவக் கல்லூரிகளின் தொடக்க விழா சித்தார்த்த நகரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஆதித்யநாத் புத்தர் சிலையைப் பரிசளித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய நலவாழ்வுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நரேந்திர மோடியின் ஆட்சியில் மருத்துவக் கல்வி ஆளுமை முன்னேறியுள்ளதாகவும், புதிதாக 157 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். புதிதாக 9 மருத்துவக் கல்லூரிகளைப் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பூர்வாஞ்சலின் பெருமை முந்தைய அரசுகளால் சிதைக்கப்பட்டதாகவும், மூளைக் காய்ச்சலால் இப்பகுதிக்குக் கெட்ட பெயர் இருந்ததாகவும் குறிப்பிட்டார். உத்தரப்பிரதேசத்தின் மோசமான மருத்துவக் கட்டமைப்பு பற்றி நாடாளுமன்றத்தில் யோகி ஆதித்யநாத் எடுத்துரைத்ததை மக்கள் மறக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
முந்தைய அரசுகள் தங்கள் பெட்டியை நிரப்பிக் கொண்டதாகக் குற்றஞ்சாட்டிய பிரதமர், ஏழைகளின் பணத்தைச் சேமிக்கவும் அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்துகொடுக்கவும் தமது அரசு முன்னுரிமை அளித்து வருவதாகத் தெரிவித்தார். புதிதாக 9 மருத்துவக் கல்லூரிகள் திறந்ததால் 2500க்கு மேற்பட்ட படுக்கைகள் கிடைத்துள்ளதாகவும், ஐயாயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். முந்தைய அரசு பூர்வாஞ்சல் பகுதி மக்களை நோய் பாதித்த நிலையில் விட்டுச் சென்றதாகவும், இப்போது வட இந்தியாவின் மருத்துவ மையமாகப் பூர்வாஞ்சல் உருவாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Comments