பெண் சடலமாக மீட்பு.. கொலையா? தற்கொலையா? தலைமை காவலரிடம் தீவிர விசாரணை..!

0 3480

சென்னை பட்டினப்பாக்கத்தில் 27 வயதான பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் நீலாங்கரை காவல் நிலைய தலைமைக் காவலரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தைச் சேர்ந்த 27 வயதான விக்னேஷ்வரி என்ற பெண் தடகள வீராங்கனை ஆவார். தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விக்னேஷ்வரி, கணவருடன் ஏற்பட்டகருத்து வேறுபாடு காரணமாக, 2 குழந்தைகளுடன் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

குடும்பச் செலவுக்கு அந்த பகுதியில் உணவகம் நடத்தி வந்த விக்னேஷ்வரிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த நீலாங்கரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் முகிலன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பழக்கம் நெருக்கமான உறவாக மாறவே, இருவரும் சேர்ந்து தனி வீடு எடுத்து ஓராண்டாக ஒன்றாக தங்கி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நேற்றிரவு விக்னேஷ்வரியின் இரண்டு பிள்ளைகளும் அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிடவே, வீட்டில் விக்னேஷ்வரியும், முகிலனும் தனியாக இருந்துள்ளனர்.

காலையில் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த முகிலன், இருவருக்கும் இடையேயான தகராறில் விக்னேஷ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறியிருக்கிறார். உள்ளே சென்று பார்த்த போது விக்னேஷ்வரி தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக கிடந்திருக்கிறார். இதனையடுத்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பட்டினப்பாக்கம் போலீசார், விக்னேஷ்வரி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விக்னேஷ்வரி சடலமாக தொங்கிய அறையின் கதவு திறந்திருந்ததாகவும், பூட்டை உடைத்து முகிலன் உள்ளே சென்றதற்கான அடையாளங்கள் இல்லை எனவும் கூறும் உறவினர்கள், முகிலனே விக்னேஷ்வரியை அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுவிட்டு, தற்கொலை என நாடகமாடுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனால், முகிலனை பிடித்து பட்டினப்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்த விக்னேஷ்வரியின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து, காவலர் முகிலனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் பெண்ணின் மரணத்திற்கான காரணம் உண்மை தெரிய வரும் என தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments