100 கோடி தடுப்பூசிகள் போட்ட பிறகு இந்தியா புதிய சக்தியுடன் முன்னேறுகிறது - பிரதமர் மோடி

0 2206

டிரோன்களின் பயன்பாடு குறித்த கொள்கையை உருவாக்கியுள்ளதாகவும், இந்தக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதும் வெளிநாட்டு நிறுவனங்களும் உள்நாட்டு நிறுவனங்களும் இத்துறையில் முதலீடு செய்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மனத்தின் குரல் என்னும் பெயரில் பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது நூறு கோடித் தடுப்பூசி போடப்பட்ட பின் நமது நாடு புதிய ஆற்றலுடன் முன்னோக்கிச் செல்வதாகவும், தடுப்பூசி இயக்கத்தின் வெற்றி நமது திறமையை உலகுக்குப் பறைசாற்றும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

வல்லப் பாய் பட்டேல் பிறந்த அக்டோபர் 31ஆம் நாள் தேசிய ஒருமைப்பாட்டு நாளாகக் கொண்டாடப்படுவதைக் குறிப்பிட்ட அவர், அந்நாளில் அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். வல்லப் பாய் பட்டேலின் வாழ்க்கை வரலாறு, கொள்கைகள் பற்றித் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள நூலை இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

 விடுதலையின் 75ஆம் ஆண்டுக் கொண்டாட்டத்தையொட்டிப் பண்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் வண்ணக்கோலப் போட்டி நடத்தலாம் என்றும் தெரிவித்தார். விடுதலைப் போராட்டக் காலத்தில் பல மொழிகளிலும் எழுதப்பட்ட தேசபக்தி, இறைபக்திப் பாடல்கள் நாட்டு மக்களை ஒருங்கிணைத்ததாகக் குறிப்பிட்ட மோடி, இப்போதும் இளைஞர்கள் மூலம் 75ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களில் அத்தகைய ஆற்றலைப் புகுத்த முடியும் எனத் தெரிவித்தார்.

 பொருட்களை வீடுகளுக்கு வழங்கவும், அவசரக் கால உதவிக்கும், சட்டம் ஒழுங்கைக் கண்காணிக்கவும் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துவது குறித்துப் பரிசீலித்து வருவதாகவும், விரைவில் இத்தகைய பணிகளுக்கு ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். ஏற்கெனவே கொரோனா தடுப்பு மருந்துகளைக் கொண்டு செல்வதற்கு டிரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருவதையும் குறிப்பிட்டார்.

டிரோன்களின் பயன்பாடு தொடர்பாக நிகழ்கால மற்றும் வருங்காலச் சாத்தியக் கூறுகள் குறித்த கொள்கையை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார். இந்தக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதும் பல வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் இத்துறையில் முதலீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். முப்படைகளும் இந்திய நிறுவனங்களிடம் 500 கோடி ரூபாய் மதிப்பில் டிரோன்கள் வாங்குவதற்காக ஆர்டர்களைக் கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments