தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, நவம்பர் மாதம் 15ஆம் தேதி வரை நீட்டிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, இம்மாதம் 31ஆம் தேதியோடு முடிவடையும் நிலையில், அதுகுறித்து, தலைமைச் செயலகத்தில், பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, மாலையில் முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், நவம்பர் மாதம் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், நவம்பர் ஒன்றாம் தேதி முதல் சுழற்சி முறையில் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரையில், நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தமிழ்நாட்டில் தியேட்டர்கள் 100% பார்வையாளர்களுடன் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் ஒன்றாம் தேதி முதல் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள மதுக்கூடங்களுடன் அனைத்து வகை தனித்து இயங்கும் பார்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் ஒன்றாம் தேதி முதல், தமிழ்நாட்டிற்குள் சாதாரண மற்றும் ஏசி பேருந்துகளில் 100% இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து பயணிக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. கேரளா நீங்கலாக மற்ற மாநிலங்களில் இருந்து வந்து செல்லும் பேருந்துகளில் மட்டும், 100% இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நவம்பர் ஒன்றாம் தேதி முதல் அனைத்து வகையான படப்பிடிப்புகளுக்கும் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ள தமிழ்நாடு அரசு, படப்பிடிப்பில் பங்கேற்கும் பணியாளர்கள், கலைஞர்கள் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே, இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்த கடைகள், உணவகங்கள், பேக்கரிகளுக்கான கட்டுப்பாடுகளில், இன்று முதல் மேலும் தளர்வளிக்கப்படுவதாக, தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில், அரசியல், திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகளுக்கான தடை தொடர்வதாக கூறப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொது இடங்களுக்கும் வருவோர், கட்டாயம் மாஸ்க் அணிவதோடு, தனிநபர் இடைவெளியை கடைபிடிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments