தமிழகத்தில் இன்று 6-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்

0 3178
தமிழகத்தில் இன்று 6-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்

 

தமிழ்நாட்டில் ஆறாவது முறையாக இன்று 50ஆயிரம் இடங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே ஐந்து ஞாயிற்றுக் கிழமைகளில் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. ஆறாவது முறையாகச் சனிக்கிழமையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட ஐம்பதாயிரம் இடங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.

சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் 1600 முகாம்கள் நடைபெறுகின்றன. காலை 7 மணிக்குத் தொடங்கிய முகாம்கள் மாலை 7 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 60 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து உள்ளதாகவும், இன்று மேலும் 3 இலட்சத்து 75 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் வர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடைபெறும் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். இரண்டாம் தவணை தடுப்பூசி போடாமல் இருக்கின்ற 57 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், 18 வயதுக்கு மேற்பட்டோரில் 32 விழுக்காட்டினர் இதுவரை தடுப்பூசி போடாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா 3-வது அலைக்கான அறிகுறிகள் இல்லை என்றும், அறிகுறிகள் இல்லை என்றாலும் 3-வது அலை வராது என்று கூற இயலாது எனவும் ராதாகிருஷ்ணன் கூறினார்.

கோவை மாவட்டத்தில் 1370 முகாம்கள் அமைக்கப்பட்டுப் பொதுமக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. துணிக்கடை, நகைக் கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. முதியோர், முகாமுக்கு வர முடியாதோருக்கு அவரவர் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி போட்டுவிட நலவாழ்வுத்துறைப் பணியாளர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 1200 முகாம்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இன்று ஒன்றேகால் இலட்சம் பேருக்குத் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் ஆகியோர் முகாமைத் தொடக்கி வைத்தனர்.

கரூர் மாவட்டத்தில் 618 வாக்குச்சாவடி அமைவிடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பணியாளர்கள் தயாராக இருந்தும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வருபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. இதனால் தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்குக் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்துப் பரிசுகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, சத்துணவுக் கூடங்கள் என மொத்தம் 643 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்குத் தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் மூர்த்தி தடுப்பூசி முகாமைத் தொடக்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட 800 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. இன்று ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments