பெற்ற தாய்க்கு தாலி கொடுத்த குழந்தை.. பிரசவத்தால் திருமணம்..! எஸ்கேப் காதலன் சிக்கிய பின்னணி
கடலூர் அருகே காதலனால் ஏமாற்றப்பட்ட பெண் ஒருவர் திருமணமாகாமலேயே குழந்தை பெற்றெடுத்த நிலையில் ஜெயிலுக்கு செல்ல பயந்த காதலன், காதலியை திருமணம் செய்து கொண்டார். பச்சிளம் குழந்தை கையால் தாலி எடுத்துக் கொடுக்க அரங்கேறிய கறார் காதல் திருமணம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த முதனை கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகள் சந்தியா. 27 வயதான இவர் நிறைமாத கர்ப்பிணியாக பிரசவத்திற்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தியாவுக்கு அங்கு ஆண்குழந்தை பிறந்த நிலையில், மருத்துவமனை பதிவேட்டில் பதிவதற்காக குழந்தையின் தந்தை பெயரை கேட்ட போது, தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்றும் தங்கள் ஊரைச்சேர்ந்த வேல்முருகன் என்பவரை 2017 ஆம் ஆண்டு முதல் தன்னை காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்வதாக கூறி அவர் தன்னிடம் எல்லை மீறியதால் தான் கர்ப்பமானதாகவும் அதன் பின்னர் வேல்முருகன் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் தவிர்த்து விட்டதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
குழந்தையின் தந்தை பெயர் பதிவதில் குழப்பம் ஏற்பட்டதால் ஊ.மங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சந்தியாவிடம் விவரங்களை பெற்ற போலீசார் முதனை கிராமத்திற்கு சென்று சந்தியாவின் காதலன் வேல்முருகனை விசாரணைக்காக அழைத்து வந்தனர். விசாரணையில் சந்தியா ஏற்கனவே பல முறை வேல்முருகனால் கர்ப்பமானதும் அதனை, மாத்திரை கொடுத்து கலைத்ததும் தெரியவந்து. தொடர்ந்து திருமணம் செய்வதாக ஏமாற்றியதால் மாத்திரையை சாப்பிட மறுத்ததால் சந்தியா வயிற்றில் குழந்தை வளர்ந்தது தெரியவந்தது.
தனக்கு குழந்தை பிறக்க இருப்பதை சுட்டிக்காட்டி சந்தியா பலமுறை வேல்முருகனிடம் திருமணம் செய்ய வலியுறுத்தி இருக்கிறார். அதற்கு வேல்முருகனின் அம்மா, அக்கா, மாமா ஆகிய மூவரும் சந்தியாவை திருமணம் செய்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்து வந்தது தெரியவந்தது. வேல்முருகன் தொடர்ந்து திருமணம் செய்ய மறுத்து பிடிவாதம் காட்டியதால் சந்தியாவின் புகாரின் பேரில் பலாத்கார வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டிவரும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து எஸ்கேப் காதலன் வேல்முருகன், காதலி சந்தியாவை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தான். அருகில் உள்ள கொளஞ்சியப்பர் கோவிலுக்கு காதல் ஜோடியை அழைத்துச் சென்றனர். ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் இருவரும் மாலை மாற்றி குழந்தை கையால் தாலியை தொட்டு எடுத்து கொடுக்க திருமணம் செய்து கொண்டனர். சந்தியாவின் கழுத்தில் தாலி கட்டி காதலியை மனைவியாக்கி காதலுக்கு மரியாதை செய்தார். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தன் மற்றும் இரு வீட்டார் பெற்றோரும் கலந்து கொண்டனர்.
பின்னர் மனைவியின் நெற்றியின் நடுவில் கும்குமம் வைப்பதற்கு மாப்பிள்ளை கை நடுங்கியது, இருந்தாலும் ஒருவழியாக நெற்றியின் ஓரத்தில் கும்குமத்தை வைத்தார்.
கூடியிருந்தவர்கள் இந்த ஜோடியை பூதூவியும் அர்ச்சதை தூவியும் வாழ்த்தினர். கைகூடா திருமணத்தை தான் பிறந்து நடத்திவைத்த பெருமிதத்துடன் படுத்துகிடந்தபடியே அந்த பச்சிளம் குழந்தை பார்த்துக் கொண்டிருந்தது.
சத்தியத்துக்கு கட்டுப்படாமல் சந்தியாவை குழந்தையுடன் தவிக்க விட்ட வேல் முருகன், போலீஸை சந்தித்ததால் சட்டத்துக்கு கட்டுப்பட்டு சந்தியாவுக்கு தாலி கட்டியுள்ளார். அதே நேரத்தில் பெண்கள் திருமணத்துக்கு முன்பாக எக்காரணம் கொண்டும் காதலனை நம்பி தனிமையை தேடினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சந்தியாவே சாட்சி..!
Comments