பேரனை கொடூரமாக கொலை செய்த விபரீத தாய் கிழவிக்கு வலை..!
காதல் திருமணம் செய்ததோடு, இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த மகளை பழிவாங்குவதற்காக போலீஸ் அதிகாரியின் மனைவி இரு பேரக்குழந்தைகளையும் கொடூரமாக கொலை செய்ய மேற்கொண்ட முயற்சியில் ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மதிச்சியம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருப்பவர் சேக்ஸ்பியர். இவரது மனைவி சாந்தி. இந்த தம்பதியரின் மகள் ஐஸ்வர்யா. படிப்பை முடித்த கையோடு மகள் ஐஸ்வர்யா பாஸ்கரன் என்பவரை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆண், பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. மகளுக்கு இரட்டை குழந்தை பிறந்த தகவல் அறிந்து வீட்டுக்குச்சென்ற சாந்தி மகளுடன் நெருக்கமாக பழகியுள்ளார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாஸ்கரன் - ஐஸ்வர்யா தம்பதியர் தங்கள் இரட்டை குழந்தைகளுடன் மதுரையில் இருந்து கோவை கவுண்டம்பாளையம் சேரன் நகர் நாகப்பா காலனிக்கு வந்துள்ளனர். அப்போது குழந்தைகளை பார்த்து கொள்வதற்காக மதுரையில் இருந்து ஐஸ்வர்யாவின் தாயார் சாந்தியும் உடன் வந்துள்ளார். கடந்த 2 மாதமாக சாந்தி இவர்களுடன் தங்கியிருந்து குழந்தைகளை அன்பாக கவனித்து வந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு குழந்தைகளின் தாய் ஐஸ்வர்யா மருந்து வாங்குவதற்காக கடைக்குச் சென்று விட்டு திரும்பி வந்தபோது தாய் சாந்தி குழந்தையை யாரோ வந்து எடுத்துச் சென்றுவிட்டனர் என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்து வீட்டுக்குள் சென்று தேடியபோது ஆண் குழந்தை படுக்கையில் தூங்கிய நிலையில் இருந்துள்ளது. பெண் குழந்தையை தேடியபோது அந்த குழந்தை வீட்டில் கழிப்பறை குழாய்க்குள் அழுத்தி துணியை வைத்து மூடப்பட்ட நிலையில் கிடந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து பெண் குழந்தையை மீட்ட ஐஸ்வர்யா, படுக்கையில் கிடந்த ஆண் குழந்தையை தூக்கச் சென்றபோது அக்குழந்தையின் பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு முகத்தில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதற்குள்ளாக வீட்டில் இருந்த சாந்தி அங்கிருந்து தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுகின்றது.
இது குறித்து கணவர் பாஸ்கரனுக்கு தகவல் தெரிவிக்க உடனடியாக துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் போலீசார் காயமடைந்த பெண் குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த ஆண் குழந்தையை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய சாந்தியை பிடிக்க போலீசார் மதுரை விரைந்தனர்.
போலீஸ் விசாரணையில் தனது மனைவி சாந்தி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறிய சிறப்பு உதவி ஆய்வாளர் சேக்ஸ்பியர், அவருக்கு அவ்வப்போது மன நிலை மாறும் அப்படிப்பட்ட சூழலில் ஏதாவது செய்திருக்கலாமோ ? என்று போலீசாரை சமாளித்து வருவதாக கூறப்படுகின்றது.
மன நிலை பாதிக்கப்பட்ட ஒருவர் இந்த அளவு திட்டமிட்டு கொலை செய்து விட்டு தப்பிச்செல்லும் வகையில் செயல்படுவாரா என்று வழக்கை விசாரிக்கும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ள நிலையில், சாதி மறுப்புதிருமணம் செய்த மகளை பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
இரட்டை குழந்தைகளையும் கொடூர எண்ணத்துடன் கொலை செய்ய முயன்று அதில் ஒரு குழந்தை பலியான சம்பவத்தில் தொடர்புடைய தாய்கிழவி சாந்தியை தனிப்படை அமைத்து போலீசார் தேடிவருகின்றனர்.
Comments