மாநாடு விலகல் எனிமிக்கும் குடைச்சலா ? அண்ணாத்த அட்டாக்..! புலம்பும் தயாரிப்பாளர்
தமிழகத்தில் ரஜினியின் அண்ணாத்த படம் பெரும்பாலான திரையரங்குகளில் வெளியாவதால், தீபாவளி ரேசில் இருந்து சிம்புவின் மாநாடு விலகிய நிலையில், விஷாலின் எனிமி படத்தை வெளியிட 250 திரையரங்குகள் ஒதுக்கப்படவில்லை என்றால் போராட்டத்தில் குதிப்பேன் என்று எனிமி படத்தின் தயாரிப்பாளர் வினோதின் என்பவர் தயாரிப்பாளர் சங்கத்தினரிடம் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் தீபாவளி வெளியிடாக ரஜினியின் அண்ணாத்த திரையரங்கில் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சிம்புவின் மாநாடு படம் போட்டியாக களத்தில் குதித்தது..! சிம்புவுக்கு டஃப் கொடுக்கும் நோக்கில் விஷால் ஆர்யா இணைந்து நடித்த எனிமி என்ற படமும் தீபாவளி ரேசில் களம் இறங்குவதாக அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 900 திரையரங்குகளில் அண்ணாத்த படத்தை அதிக காட்சிகள் வெளியிடுவதில் திரையரங்கு உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகின்றது. இதனால் சிம்புவின் மாநாடு படத்திற்கு போதிய எண்ணிக்கையிலான திரையரங்குகள் கிடைக்காத சூழலில் தங்கள் பட வெளியீட்டை தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி அறிவித்தார். ஆனால் சிம்புவின் படத்தை வெளியிட விடாமல் சிலர் பஞ்சாயத்து செய்வதாக டி.ராஜேந்தரும் அவரது மனைவி உஷாவும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
மாநாடு படம் விலகியதால் எப்படியும் நமக்கு கூடுதல் திரையரங்குகள் கிடைக்கும் வசூலும் கணிசமாக உயரும் என்ற நம்பிக்கையோடு இருந்த எனிமி படத்தின் தயாரிப்பாளர் வினோத்தின் கனவில் கல் விழுந்த கதையாக 100 திரையரங்குகள் கூட அந்த படத்திற்கு கிடைக்காது என்று தகவல் கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, அண்ணாத்த படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் தங்களுக்கும் போதுமான திரையரங்குகளை ஒதுக்க கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் வினோத்தின் கோரிக்கையை யாரும் காது கொடுத்து கேட்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதையடுத்து அண்ணாத்த தயாரிப்பாளருக்கு எதிராக குரல்பதிவு ஒன்றை புகாராக வெளியிட்டுள்ளார் வினோத்.
தன்னுடைய எனிமி படத்திற்கு 250 திரையரங்குகள் பரவலாக தமிழகம் முழுவதும் ஒதுக்கப்படவில்லை என்றால் போராட்டத்தில் குதிப்பேன் என்றும் எச்சரித்துள்ளார் தயாரிப்பாளர் வினோத்.
அண்ணாத்த டிரைலருக்கு யூடியூப்பில் போதிய பார்வையாளர்கள் இல்லை என்றும், மாநாடு படத்தின் டிரைலர் அதிகமாக பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்ட நிலையில், தீபாவளி ரேசில் இருந்து மாநாடு விலகியது. தீபாவளிக்கு அண்ணாத்த படம் அதிக திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் எனிமிக்கு போதுமான திரையரங்குகள் கிடைக்குமா ? என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும்..!
15 வருடங்களுக்கு முன்பெல்லாம் தீபாவளிக்கு முன்னணி நடிகர்கள் நடித்த 5 அல்லது 8 படங்களாவது திரையரங்குகளில் வெளியாகும். ஆனால் தற்போது தயாரிப்புச்செலவு பெரும் அளவு அதிகரித்த காரணத்தால் பெரிய நடிகர்களின் படங்களை தனியாக வெளியிட முயற்சி நடப்பதாக கூறப்படுகின்றது.
Comments