சென்னையில் போக்குவரத்து காவலர்கள் மீது டேங்கர் லாரி உரிமையாளர்கள் புகார்!
சென்னை மாநகரின் பிரதான சாலைகள் வழியாக குறிப்பிட்ட நிறுவனத்தின் டேங்கர் லாரிகளை மட்டும் போக்குவரத்து காவலர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதிப்பதாக சமையல் எண்ணெய் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சென்னை காவல் போக்குவரத்து கூடுதல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.
சென்னை துறைமுகத்திற்கு செல்லும் டேங்கர் லாரிகள் மற்றும் கண்டெய்னர் வாகனங்கள், விரைவு சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும் என சென்னை போக்குவரத்து காவல்துறையின் உத்தரவு அமலில் உள்ளது. அதிலும், கனரக வாகனங்கள் செல்வதற்கான வழியில் மட்டுமே செல்ல வேண்டும் என்ற விதிகளை மீறி, இலகுரக வாகனங்கள் செல்லும் வழியிலும் லஞ்சம் பெற்றுக் கொண்டு போக்குவரத்து காவல் துறையினர் அனுமதிப்பதாக நீண்டகால குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்த நிலையில், குறிப்பிட்ட நிறுவனத்தின் டேங்கர் லாரிகள் மட்டும் விதிகளை மீறி நகரின் முக்கிய சாலைகள் வழியாக அனுமதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை மேடவாக்கத்தில் பிரபல சமையல் எண்ணெய் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் இருந்து மாதத்திற்கு 20 ஆயிரம் டன் சமையல் எண்ணெய் சிங்கப்பூர், மலேசியா போன்ற பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தின் சமையல் எண்ணெய் துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் சுமார் 30 டேங்கர் லாரிகள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
அவ்வாறு கொண்டு வரப்படும் சமையல் எண்ணெய் டேங்கர் லாரிகள் விதிகளை மீறி அண்ணா சாலை வழியாகவும், காமராஜர் சாலை வழியாகவும் துறைமுகப் பகுதிக்கு கொண்டு செல்லப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பொதுவாக கனரக வாகனங்கள் காலை 7 மணியிலிருந்து இரவு 10 மணி வரை சென்னை நகருக்குள் வரக்கூடாது என்ற உத்தரவு உள்ளது.
இந்த குறிப்பிட்ட டேங்கர் லாரிகள் மட்டும் தினமும் போக்குவரத்து அதிகமாக காணப்படும் நேரத்திலேயே மேடவாக்கத்தில் இருந்து நகரின் முக்கிய சாலை வழியாக துறைமுகத்திற்கு அனுமதிக்கப்படுதாகவும், இதற்காக மாதம் ஒரு லட்சம் வரை குறிப்பிட்ட போக்குவரத்து காவலர்கள் பெறுவதாக தமிழ்நாடு சமையல் எண்ணெய் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.
துறைமுகத்திலிருந்து காமராஜர் சாலை, அண்ணா சாலை வழியாக மேடவாக்கம் சென்றடைய 30 கிலோமீட்டர் மட்டுமே தூரம் என்பதால் லஞ்சம் கொடுத்துவிட்டு, இந்த குறிப்பிட்ட டிரான்ஸ்போர்ட் நிறுவனம் மட்டும் முறைகேடு செய்வதாக குற்றம்சாட்டும் சமையல் எண்ணெய் டேங்கர் லாரி உரிமையாளர்கள், காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்ட எண்ணூர்- மணலி விரைவு சாலை வழியாக துறைமுகம் சென்றடைய எழுபது கிலோமீட்டர் தொலைவுடன் மூன்று சுங்கச்சாவடி கட்டணம் சேர்த்து 800 ரூபாய் செலவாகிறது என்றும் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சென்னை அடையாறில் இந்த எண்ணெய் நிறுவனத்தின் டேங்கர் லாரி விபத்தில் சிக்கி சாலை முழுவதும் எண்ணெய் கசிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தியது. அதேபோல் கடந்த ஆண்டு இதே நிறுவனத்தின் டேங்கர் லாரி சமையல் எண்ணெயுடன் துறைமுகம் நோக்கி வரும்பொழுது ஜெமினி மேம்பாலத்தில் இருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. ஒரு முறை இந்த டேங்கர் லாரி மோதி மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் பெண் காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது.
எனவே சென்னை நகருக்குள் முறையான வழியில் வாகனங்கள் இயங்குவதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமையல் எண்ணெய் டேங்கர் லாரி உரிமையாளர்கள் புகார் அளித்துள்ளனர்.
Comments