9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளில் இன்று மறைமுகத் தேர்தல்!
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்ட மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில், தலைவர்- துணைத் தலைவர் பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று, அதில் வெற்றி பெற்றவர்கள் நேற்றுமுன்தினம் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில், மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான வழிகாட்டுதல்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி பெரும்பான்மைக்கும் குறைவான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வந்திருப்பின் தேர்தல் நடத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 நிமிடங்களுக்கு பின்னரும் போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வரவில்லையென்றால் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும் ஒரு பதவிக்கு இரண்டு பேர் போட்டியிட்டு சம வாக்குகளைப் பெற்றால் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
9 மாவட்ட ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள், 74 ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள், 2ஆயிரத்து 901 ஊராட்சி துணைத் தலைவர்கள் உள்பட மொத்தம் 3ஆயிரத்து 557 பேர் இன்று தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Comments