இளைஞரை திருமண ஆசை காட்டி ஏமாற்றம்... ஒரு நாள் மனைவி உள்பட 5 பெண்கள் கைது!
திருப்பூரில் இளைஞரை திருமணம் செய்வது போல் நடித்து நகை மற்றும் பணத்துடன் தலைமறைவான ஒரு நாள் மனைவி உள்பட 5பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் புரோக்கர்கள் மூலம் திருமணத்திற்கு பெண் தேடி வந்தார்.
திருப்பூர் பெண் புரோக்கர் அம்பிகா என்பவர், ரீசா என்ற இளம்பெண்ணை மணமகள் என்று அறிமுகம் செய்து வைத்து, திருமணத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளார். ரீசாவுக்கு பெற்றோர்- உறவினர் யாருமில்லை என்றும், நகை மற்றும் துணிகளை வாங்கி கொடுக்க வேண்டும் என்றும் கூறிய புரோக்கர் அம்பிகா, புரோக்கர் கமிஷனாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் எனக் கோரியுள்ளார்.
கடந்த மாதம் 24-ந்தேதி குலதெய்வ கோவிலில் பெற்றோர், உறவினர் முன்னிலையில் ரீசாவை திருமணம் செய்து கொண்டார் ராஜேந்திரன். பெண் தரப்பில் பெரியம்மா தேவி, அவரது அக்கா தங்கம், பெண் புரோக்கர்கள் அம்பிகா,வள்ளியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், திருமணம் முடிந்தமறுநாள் ரீசாவை வீட்டில் காணாததால் அதிர்ச்சி அடைந்துள்ளார் ராஜேந்திரன். தான் வீட்டில் இல்லாத நேரத்தில் அரைசவரன் தாலி,தோடு மற்றும் பட்டுப்புடவை சகிதம் வெளியே சென்ற ரீசா அங்கு வந்த காரில் ஏறி சென்றது தெரிய வந்தது.
மனைவியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்த நிலையில், புரோக்கர் அம்பிகாவை அவர் தொடர்பு கொண்டபோது சரியான பதிலை கூறாததால் குழப்பமடைந்தார்.
அப்போதுதான் இந்த கும்பல் தன்னை ஏமாற்றி விட்டு மோசடி செய்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது. ரீசாவை பற்றி விசாரித்த போது, அவர் ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகளுக்குத் தாய் என்பதும், 5 பெண்களும் சேர்ந்து தன்னை ஏமாற்றியதையும் கண்டு அதிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக குன்னத்தூர் காவல் நிலையத்தில் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஒரு நாள் மணப்பெண் ரீசா, பெரியம்மா தேவி, அக்கா தங்கம் மற்றும் புரோக்கர்கள் வள்ளியம்மாள், அம்பிகா ஆகிய 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Comments