மேட்ரிமோனியல் மூலம் மனைவிக்கு மாப்பிள்ளை தேடிய கேடி கணவன் கைது

0 4893

விவாகரத்து தரமறுத்த மனைவியை பழிவாங்கும் விதமாக மேட்ரிமோனியல் இணையதளத்தில் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு மாப்பிள்ளை தேடிய வில்லங்க கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருவள்ளூரை அடுத்த உளுந்தை கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகள் ஜான்சி. சாப்ட்வேர் இன்ஜினியரான இவருக்கும், வெள்ளியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்பாபு மகன் ஓம்குமார் என்பவருக்கும் 2016 பிப்ரவரியில் திருமணம் நடந்தது.

இதைத்தொடர்ந்து ஜான்சிக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது. இதனால் தன் கணவருடன் அமெரிக்கா சென்றார். அவர்களுக்கு நான்கரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஓம்குமார் அமெரிக்காவிலிருந்து தன் மனைவியை விட்டு பிரிந்து சொந்த ஊரான வெள்ளியூருக்கு திரும்பியுள்ளார்

கடந்த மூன்றரை ஆண்டுகளாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், ஓம்குமார் தனக்கு விவாகரத்து கேட்டு பூந்தமல்லியில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தொடந்து நடைபெற்று வருகிறது. இதுவரையில் இவர்களுக்கு விவாகரத்து கிடைக்கவில்லை. இந்நிலையில் பிரபல திருமண தகவல் மையத்தில் ஜான்சிக்கு மாப்பிள்ளை வேண்டுமென தகவல் கொடுத்து அதில் அவரது தந்தையான பத்மநாபன் செல்போன் எண்ணும் கொடுக்கப்பட்டிருந்தது.

ஆன்லைன் விளம்பரத்தைப் பார்த்தவர்கள் ஜான்சியை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து அவரது தந்தையான பத்மநாபனுக்கு தினமும் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுபோல் எந்த ஒரு திருமண தகவல் மையத்திலும் மாப்பிள்ளை வேண்டும் என தான் விளம்பரம் செய்யவில்லை என்றும், தனது பெயரில் திருமண தகவல் மையத்தில் பொய்யான தகவலைப் பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் புகார் கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில் திருவள்ளூர் சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் விவாகரத்து கிடைக்காத ஆத்திரத்தில் ஓம்குமார் தான் திருமண தகவல் மையத்தில் பொய்யான தகவல்களை பதிவிட்டு தன் மனைவிக்கு மாப்பிள்ளை வேண்டும் என பதிவிட்டிருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் ஓம்குமாரை அவரது வீட்டில் வைத்து கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

திருமண தகவல் மையத்தில் தனது மனைவிக்கே வரன் தேடி போட்டோவை பதிவு செய்து மனஉளைச்சல் ஏற்படுத்திய கணவரின் செயல்பாடு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY