உயிரோடு இருப்பவருக்கு இறப்புச்சான்றிதழ்: சொத்துக்காக துரோகியான தாய்மாமன்!

0 3019
உயிரோடு இருப்பவருக்கு இறப்புச்சான்றிதழ்: சொத்துக்காக துரோகியான தாய்மாமன்!

பிரான்ஸ் நாட்டில் உயிரோடு இருப்பவரை இறந்துவிட்டார் என போலி இறப்புச்சான்றிதழ் தயாரித்து, போலி உயிலும் தயாரித்து, காரைக்காலில் உள்ள அவரது சொத்துகளை விற்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த சார்பதிவாளர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். 

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியைச் சேர்ந்த குமார் ஆனந்த் பிரெஞ்சு குடியுரிமை பெற்று கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார்.  இவரது பெயரில் காரைக்கால் மாவட்டத்தில் பல இடங்களில் மனைகள், வீடுகள், விளை நிலங்கள் உள்ளன. குமார் ஆனந்த்தின் பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், சொத்துகளை பகுதி பகுதியாக அவரது உறவினர்கள்தான் நிர்வகித்து வருகின்றனர். அவர்களில் குமார் ஆனந்த்தின் தாய்மாமனான தேவராஜுவும் ஒருவர். தன் வசம் பராமரிப்பிலுள்ள சொத்துகளை அபகரிக்க எண்ணிய தேவராஜு, கடந்த 2008ஆம் ஆண்டு குமார் ஆனந்த் இறந்துவிட்டதுபோல போலியான இறப்புச்சான்றிதழை தயாரித்துள்ளார். அத்துடன் கடந்த 1996ஆம் ஆண்டு குமார் ஆனந்த் தனது பெயரில் உள்ள சொத்துக்களை தேவராஜ் பெயருக்கு மாற்றியதாக போலியான உயிலும் தயாரித்துள்ளார்.

இந்த உயில் மற்றும் இறப்பு சான்றிதழை வைத்து ஆனந்தின் சொத்துகளில் நெடுங்காடு பருத்திக்குடி கிராமத்திலுள்ள விளைநிலங்களின் ஒரு பகுதியை செருமாவிலங்கை பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் என்பவருக்கும் வடமட்டம் மேலக்கோட்டுச்சேரியைச் சேர்ந்த பாஸ்கருக்கும் கிரையம் செய்ய தேவராஜ் திட்டமிட்டார். அதன்படி திருநள்ளாறு சார்பதிவாளர் முருகானந்தம் என்பவரை அணுகிய போது ஆவணங்கள் மீது சந்தேகம் கொண்டு பத்திரப்பதிவு செய்ய அவர் மறுத்துள்ளார். இதனை அடுத்து முருகானந்தம் விடுமுறையில் சென்ற நாளாக பார்த்து பொறுப்பு சார்பதிவாளராக வந்த காரைக்கால் சார்பதிவாளர் ஜெயக்குமாரை வைத்து கடந்த மாதம் பத்திரப்பதிவு செய்துள்ளார் தேவராஜ்.

இந்தத் தகவல் குமார் ஆனந்த்தின் உறவினர்கள் மத்தியில் மெல்லக் கசியத் தொடங்கியுள்ளது. அவர்கள் திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகாரளிக்கவே, போலி உயில் விவகாரமும் இறப்புச்சான்றிதழ் விவகாரமும் வெளியே தெரியவந்தது. இதனையடுத்து தேவராஜ் மீதும் சொத்துக்களை வாங்கிய பாஸ்கர், இளங்கோவன், பத்திரம் எழுதிய ஆவண எழுத்தர் சையது சாகுல் ஹமீது மற்றும் போலி ஆவணங்களைக் கொண்டு சொத்துகளை விற்க பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் ஜெய்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேவராஜ், பாஸ்கர், சையது சாகுல் ஹமீது ஆகியோரை கைது செய்த போலீசார், இளங்கோவனையும் சார்பதிவாளர் ஜெயக்குமாரையும் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments