ஜம்மு காஷ்மீரில் லஷ்கரே தொய்பா தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொலை..
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்ட அடர்ந்த காடுகளில் இந்திய ராணுவம் நடத்திய என்கவுன்டரில் லஷ்கரே தொய்பா தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கடந்த 2, 3 மாதங்களாக ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்ட காடுகள் வழியாக எல்லைக்கு அப்பால், பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவி வருவதை தடுக்கும் முயற்சியில், நமது ராணுவ வீரர்கள் 9 பேர் வீர மரணம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் கடந்த 16 ஆம் தேதி அப்பகுதிக்கு சென்று ராணுவ அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து ராணுவ தளபதி நரவணேயும் கட்டுப்பாட்டு எல்லைப்பகுதிக்கு வந்து தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டுவது பற்றி ராணுவ அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார். தீவிரவாதிகள் இரண்டிரண்டு பேராக ஊடுருவி வந்ததால் அவர்களை பிடிக்க முழு ராணுவ பிரிவும் செயல்படும் நிலை ஏற்பட்டது.
இதற்கு மாற்றாக, தீவிரவாதிகள் தாங்களாகவே ராணுவத்தின் வலையில் சிக்கும் வகையில் வியூகம் வகுக்கும் வழிமுறைகளை அவர் வழங்கியதாக கூறப்படுகிறது. தீவிரவாதிகள் அருகில் உள்ள கிராமங்களில் நுழையும் வகையில் வியூகம் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் சுற்றி வைக்கப்பட்டனர்.
அதன் பின்னர் முழு வேகத்தில் தீவிரவாத வேட்டையில் ஈடுபட்ட ராணுவத்தினர் லஷ்கரே தொய்பாவை சேர்ந்த 6 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தி உள்ளனர். 10 க்கும் அதிகமாக தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என தகவல் உள்ளதால் எஞ்சியவர்களை தீர்த்துக் கட்டுவதற்கான என்கவுன்டர் தொடர்ந்து நடப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
Comments