மின்கம்பி அறுந்து விழுந்து தம்பதி பலி: மனைவியை அரவணைத்தவாறே பிரிந்த கணவன் உயிர்!
நாகையில் உயர் மின்னழுத்த கம்பி திடீரென அறுந்து விழுந்து தம்பதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சாரம் தாக்கி துடிதுடித்த மனைவியை காப்பாற்றச் சென்ற கணவன் அவரை அரவணைத்தவாறே இறுதி மூச்சைவிட்ட சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு
அந்தணப்பேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்த பழனிவேலு - ராஜலட்சுமி தம்பதியினர் நாகை துறைமுகத்தில் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கும் நிலையில் மூவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்த நிலையில், வழக்கம்போல் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக உணவு தயார் செய்யும் பணியில் ராஜலட்சுமி ஈடுபட்டிருந்தார்.
நண்டு குழம்பு வைப்பதற்காக, பாத்திரத்தில் நண்டை எடுத்துக் கொண்டு சுத்தம் செய்வதற்காக கொல்லைப்புறத்திற்கு சென்ற ராஜலட்சுமி மீது அவ்வழியாக மேலே சென்ற உயர் மின்னழுத்த கம்பி திடீரென அறுந்து விழுந்துள்ளது. மின்சாரம் பாய்ந்து துடிதுடித்த ராஜலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு, ஓடி வந்த பழனிவேலு அவரை காப்பாற்றும் பதற்றத்தில் மின்கம்பியை கையால் பிடித்ததாக கூறப்படுகிறது.
இதில் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததை அடுத்து கணவனும், மனைவியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மனைவியை அரவணைத்தவாறே பழனிவேலுவின் உயிர் பிரிந்தது. இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் வந்து போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்து சடலங்களை மீட்டனர். விபத்து குறித்து நாகை நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மழை காரணமாக, காற்றில் பிய்த்தெறியப்பட்ட தென்னை ஓலை உயர் மின்னழுத்த கம்பிகள் மீது விழுந்து சிக்கியிருந்த நிலையில், கம்பிகள் ஒன்றுடன் ஒன்றாக உரசி, போஸ்டுக்கும், மின்கம்பிக்கும் இடையேயான பீங்கானாலான இன்சுலேட்டர் இணைப்பு உடைந்து மின்கம்பி அறுந்து விழுந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
Comments