லக்கிம்பூர் வன்முறைச் சம்பவத்தை கண்டித்து விவசாயிகள் ரயில் மறியல்
லக்கிம்பூர் கேரி படுகொலையைக் கண்டித்தும், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவைப் பதவியில் இருந்து நீக்கிக் கைது செய்ய வலியுறுத்தியும் டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் விவசாயசங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் கேரியில் அக்டோபர் 3ஆம் நாள் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காரை ஏற்றியதில் 4 பேர் உயிரிழந்தனர். மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா காரை ஏற்றியதாகக் கூறப்படும் சம்பவத்தில், விவசாயிகள் திருப்பித் தாக்கியதில் அந்த வாகனங்களில் இருந்த 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கைத் தானாக எடுத்து விசாரித்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின் ஆசிஷ் மிஸ்ராவை உத்தரப் பிரதேசக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அஜய் மிஸ்ரா அமைச்சர் பதவியில் இருக்கும் வரை இந்த வழக்கில் நீதி கிடைக்காது எனக் கூறும் விவசாய சங்கத்தினர், அவரைப் பதவியில் இருந்து நீக்குவதுடன் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியானாவின் சோனிபத் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபடுவதாக விவசாய சங்கங்கள் அறிவித்த நிலையில், அங்கு விரைவு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.
லக்கிம்பூர் படுகொலையைக் கண்டித்து அரியானாவின் பகதூர்கரில் தண்டவாளத்தில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு ரயில்வேக்குட்பட்ட 30 இடங்களில் போராட்டம் நடைபெற்றதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 8 விரைவு ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரயில் மறியலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இயல்பு நிலையைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுவோர் மீது தேசியப் பாதுகாப்புப் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் உத்தரப் பிரதேசக் காவல்துறை எச்சரித்துள்ளது.
Comments