ஒரு கோடிக்கு விற்க முயன்ற தொன்மையான 2 சிலைகள் மீட்பு : 7 பேர் கைது

0 4615

மேல்மருவத்தூர் அருகே ஒரு கோடி ரூபாய்க்கு விற்பதற்காகக் கொண்டு செல்லப்பட்ட தொன்மையான இரண்டு சிலைகள் மீட்கப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர். சினிமா பாணியில் கோட்வேர்டு கேட்டு சோதித்த சிலைக் கடத்தல் கும்பலை, போலீசார் சுற்றிவளைத்தது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள சித்தாமூர் என்ற இடத்தில் தொன்மையான கோயில் சிலைகளை கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை செய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீனாட்சி அம்மன் சிலை உள்பட இரண்டு சிலைகளை பறிமுதல் செய்து, ஏழு பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் வேலூரில் ரிஷபதேவர் சிலையும் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் மூர்த்தி ஆகிய இரண்டு பேர், சிலை கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மீனாட்சி சிலையை ஒரு கோடி ரூபாய் வரை மற்றொரு கடத்தல் கும்பலுக்கு விற்க முயன்றது குறித்தய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் மாறுவேடத்தில் சிலையை வாங்குவது போல் சென்று அவர்களையும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்

முன்னதாக சிலை கடத்தல்காரர்கள் போலீசாருக்கு பல கோடு வேர்டு(code word) மூலம் பரிசோதித்துள்ளனர். வந்துள்ளவர்கள் உண்மையாகவே சிலையை வாங்க வந்தவர்கள் தானா அல்லது காவல் துறையைச் சேர்ந்தவர்களா என்பதை உறுதி செய்வதற்காக பல்வேறு கட்ட சோதனைகளை நடத்தியுள்ளனர்.

சிலையை வாங்குவதற்கு முன்னால் பத்து ரூபாய் நோட்டை கொடுக்க வேண்டும் என்பதும் அதை கேள்வியே கேட்காமல் எடுத்து கொடுத்தால்தான் முதற்கட்ட சோதனையில் நம்பிக்கை ஏற்படும், அடுத்ததாக சில கேள்விகளை போலீசாரிடம் கேட்டுள்ளனர். மிக எளிமையான கேள்வி, ஆனால் சரியாக பதில்களை கூறிவிட்டால் அவர்கள் சிலையை வாங்க வந்தவர்கள் அல்ல என்பதை தெரிந்துகொண்டு சிலை கடத்தல் கும்பல் உடனடியாக தப்பிவிடும்.

அதன் பிறகு, மூன்றாவது கட்டமாக சிலைகளை எப்படி சோதனை செய்வீர்கள் என்றும், இது உண்மையான தொன்மையான சிலை தானா என்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர். தங்களுக்கு நம்பிக்கையான பதில் கிடைத்த பின்னரே இந்த கும்பல் சிலையை விற்க முன்வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவரங்களை முன்கூட்டியே ரகசியமாகத் தெரிந்து கொண்ட போலீசார் கச்சிதமாக உரிய பதிலைச் சொல்லி, கடத்தல்காரர்களை நம்பவைத்து சித்தாமூருக்கு வரவழைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்படுவதற்கு முன்பாக அந்த இடத்தில் உள்ளூர் விவசாயி, ஆட்டோ ஓட்டுநர் போன்ற பல வேடங்களில் ஆங்காங்கே சந்தேகம் வராதபடி மாறுவேடத்தில் இருந்துள்ளனர். சிலையை வாங்கப் போவதாகக் கூறிய நபர் மற்றும் அருகிலிருந்தவர்கள் முகக் கவசம் அணிந்து இருந்ததால் சிலை கடத்தல் கும்பலால் எளிதில் அடையாளம் காண முடியவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு சிலைகளும் தொன்மையான சிலைகள் என்பதால், அவற்றை யாருக்கு விற்க திட்டமிட்டனர், வெளிநாட்டுக்கு கடத்தி விற்க முயன்றது யார் என பல்வேறு கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments