தந்தையோடு சேர்ந்து தாயைக் கொன்ற மகன்... மருமகளுக்காக உயிரைவிட்ட பாசக்கார மாமியார்

0 11875
தந்தையோடு சேர்ந்து தாயைக் கொன்ற மகன்... மருமகளுக்காக உயிரைவிட்ட பாசக்கார மாமியார்

கல்லூரியில் படித்து வந்த மருமகளின் படிப்பு பாதிக்கக்கூடாது என்பதற்காக, அவரை தாயார் வீட்டுக்கு மாமியார் அனுப்பி வைத்த நிலையில், ஆத்திரமடைந்த மகன், தந்தையோடு சேர்ந்து தாயைக் கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஜமீன்சிங்கப்பட்டியை சேர்ந்தவர்கள் முருகன் - சங்கரம்மாள் தம்பதி.

 இவர்களுடைய மகன் தளவாய் சாமிக்கு, கல்லூரி 2 ஆம் ஆண்டு படித்து வந்த அவரது சொந்த மாமன் மகளை ஓராண்டுக்கு முன் திருமணம் செய்துவைத்துள்ளனர். தற்போது அந்தப் பெண் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

ஞாயிற்றுக்கிழமை காலை சங்கரம்மாள் கட்டிலில் இருந்து கீழே விழுந்து மூக்கில் அடிபட்டு இறந்துவிட்டார் என்று தகப்பனும், மகனும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் கூறியுள்ளனர். தகவலறிந்து வந்த கல்லிடைகுறிச்சி போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணையில் இறங்கினர். முருகனும் தளவாய்சாமியும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசவே, தங்கள் விசாரணையில் சங்கரம்மாளை இருவரும் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர் என்கின்றனர் போலீசார்.

முருகனும் தளவாய்சாமியும் நாள்தோறும் ஒன்றாக மது அருந்திவிட்டு வந்து வீட்டில் தகராறில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் கல்லூரி படித்து வந்த மருமகளின் படிப்பு பாதிக்கப்படுகிறதே என கவலைப்பட்டு வந்துள்ளார் சங்கரம்மாள். மருமகள் தனது சொந்த அண்ணன் மகள் என்பதாலும் அவர் மீது சங்கரம்மாளுக்கு கூடுதல் அக்கறை இருந்துள்ளது. இதனையடுத்து படிப்பு முடியும்வரை மருமகளை அவரது தாய் வீட்டில் தங்கி இருக்குமாறு அனுப்பி வைத்துள்ளார். மனைவியை தன்னோடு சேர விடாமல் தாய் தடையாக இருப்பதாக அவர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளான் தளவாய்சாமி.

இது ஒருபுறம் இருக்க, தினந்தோறும் குடித்துவிட்டு வரும் கணவனை சங்கரம்மாள் தகாத சொற்களால் வசைபாடி வந்ததால், மனைவி மீது முருகனும் ஆத்திரத்தில் இருந்துள்ளான். இந்நிலையில்தான் சனிக்கிழமை இரவு போதையில் வந்த தந்தையும் மகனும் சேர்ந்து சங்கரம்மாளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர் என்றும் அந்த போராட்டத்தில் கட்டிலில் இருந்து கீழே விழுந்த சங்கரம்மாள் மூக்கில் அடிப்பட்டு இறந்துள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments