முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

0 4626

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடுகள் உள்ளிட்ட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 28கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது சொத்துகுவிப்பு வழக்குப்பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை, அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. சென்னை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருச்சி, கோவை உள்ளிட் 6 மாவட்டங்களில் விஜயபாஸ்கர் தொடர்புடைய 43 இடங்களில் 100க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சௌராஷ்டிரா தெருவில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டிலும், அருகிலுள்ள அவரது தந்தை சின்னத்தம்பி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சி.விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமார் இல்லத்திலும் ரெய்டு நடக்கிறது. இதுதவிர, திருவேங்கைவாசலுள்ள கல்குவாரியிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், புதுக்கோட்டை அதிமுக நகரச் செயலாளர் பாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பர் எனக் கூறப்படும் சேட் என்ற அப்துல்ரகுமான் என்பவரது இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. விஜயபாஸ்கரின் ஆதரவாளரும் சுபபாரதி கல்விக்குழுமங்களின் உரிமையாளருமான தனசேகரன் வீடு உட்பட புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 29 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் கீழ்ப்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், அங்கு தங்கியிருக்கும் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நுங்கம்பாக்கத்திலுள்ள விஜயபாஸ்கர் தந்தை பெயரிலுள்ள வீட்டில் ரெய்டு நடக்கிறது. தியாகராய நகரிலுள்ள வீடு, மந்தவெளியிலுள்ள ஸ்ரீவாரி ஸ்டோன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பெசண்ட் நகரிலுள்ள ஆன்யா எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நந்தனத்தில் விஜயபாஸ்கரின் உறவினரான சரவணன், வளசரவாக்கத்தில் உதவியாளர் சீனிவாசன் ஆகியோரது வீடுகள் என சென்னையில் 7 இடங்களில் சோதனை நடக்கிறது.

இதனிடையே, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் விபரங்கள் வெளியாகியுள்ளன. 2016 சட்டமன்ற தேர்தலின் போது, விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவரது சொத்து மதிப்பு 6கோடியே 41லட்சம் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், 2016லிருந்து 2021வரையிலான காலக் கட்டத்தில் அவரது சொத்து மதிப்பு 58கோடியே64லட்சம் ரூபாயாக உயர்ந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி பெயரில் செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கான முதலீடுகள், செலவினங்கள், வருவாய் மற்றும் வரி விபரங்கள் போக, 28கோடியே 22லட்சம் ரூபாய் அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக எஃப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 6 கோடியே 58லட்சம் ரூபாய்க்கு ஏழு டிப்பர் லாரிகள், 10 கான்கிரீட் சிமெண்ட் கலவை இயந்திரங்கள், ஜே.சி.பி. ஆகியவையும், 53 லட்சத்திற்கு ஒரு பி.எம்.டபுள்யூ காரும், 40லட்சத்திற்கு 80 சவரன் நகைகளும் விஜயபாஸ்கர் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் மொரப்பாக்கம், பிளாவட்டத்தில் 4 கோடி ரூபாய்க்கு விவசாய நிலங்கள் வாங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது தவிர, சென்னை தியாராய நகரில் 14 கோடியே 51லட்சம் ரூபாய்க்கு வீடு ஒன்றும் விஜயபாஸ்கர் வாங்கியுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Rasi Blue Metals, Greenland Hitech Promoters, IRIS ECOPOWER VENTURE LIMITED, Srivari Stones ஆகிய நிறுவனங்கள் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரிலும், ராசி எண்டர்பிரைசஸ், V Infrastructre, Anya enterprises ஆகிய நிறுவனங்கள் விஜயபாஸ்கரின் மனைவி பெயரிலும் செயல்பட்டு வருகின்றன. இது தவிர, மதர் தெரசா கல்வி அறக்கட்டளை என்ற அறக்கட்டளையின் கீழ் புதுக்கோட்டையில் 14 கல்வி நிறுவனங்களையும் இருவரும் நடத்தி வருவதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை நஞ்சுண்டாபுரத்திலுள்ள விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரம் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. அங்கு நின்றிருந்த பென்ஸ் காரையும் அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். மேலும், வருவாய்த்துறையினர், நகை மதிப்பீட்டாளர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, நகைகளை மதிப்பீடு செய்யும் பணி நடைபெறுவதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments