கேரளாவில் வெள்ளம்- நிலச்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு

0 2962

கேரளாவை புரட்டிப்போட்ட கனமழை-வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடந்த 3 நாட்களாக கேரளாவில் கன மழை பெய்து வருகிறது. இதனால் கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, இடுக்கி, பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் சாலைகள், வீடு என அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கோட்டயம் மாவட்டத்தில் கூட்டிக்கல், பெருவந்தனம் கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் மண்ணில் புதைந்தன.

இடுக்கியில் நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களில் 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், கடற்படை மற்றும் விமானப் படை சார்பிலும் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

பத்தனம்திட்டாவிலும் தொடர்ந்து கனமழை பெய்வதை அடுத்து பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

கனமழையால் கோட்டயத்தில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் இடுக்கி, திருச்சூர் உட்பட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கனமழையை தொடர்ந்து கேரளாவின் முக்கிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இடுக்கி அணையின் நீர்மட்டம் அபாய அளவை தொடும் நிலையில் உள்ளதால் அங்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இந்த அணையின் அதிகபட்ச நீர்தேக்கும் உயரம் 2 ஆயிரத்து 403 அடியாகும் தற்போது அணையில்  2 ஆயிரத்து 396 புள்ளி 96 அடி நீர் உள்ளது.

நீர்மட்டம் மேலும் ஒரு அடி உயர்ந்தால் சிவப்பு அலர்ட் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 986 புள்ளி 33 அடி கொள்ளளவு கொண்ட பத்தனம் திட்டா மாவட்டம் கக்கி அணைக்கட்டில் நீர்மட்டம் 983 புள்ளி 5 அடியாக உயர்ந்ததை அடுத்து இந்த அணை உடனே திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

இதே போன்று  எர்ணாகுளம் மாவட்டம் இடமலையார் அணைக்கட்டும் வேகமாக நிரம்புவதால் அப்பகுதியில்  நீல அலர்ட் விடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments