வேட்டியிலும் போலியாம்.. மக்களே உஷார்.. தரமானதான்னு பார்த்து வாங்குங்க..!

0 8052
வேட்டியிலும் போலியாம்.. மக்களே உஷார்.. தரமானதான்னு பார்த்து வாங்குங்க..!

பிரபல  நிறுவனங்கள் பெயரில் போலியாக வேட்டி தயாரித்து விற்றுவந்த கடையில் அதிரடி சோதனை நடத்தி நூற்றுக்கணக்கான போலி வேட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 100 ரூபாய்க்கு வேட்டியை வாங்கி 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட வில்லங்க வியாபாரம் வெளிச்சத்துக்கு வந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள மகராஜன் ஜவுளிக்கடையில் விற்கப்படும் பிரபல நிறுவனங்களின் வேட்டிகள் தரமின்றி இருப்பதாக புகார் எழுந்தது. தங்களிடம் வேட்டிகளே வாங்காத மகராஜன் கடையின் பெயரில் புகார்கள் வந்ததால் உஷாரான ராம்ராஜ் நிறுவன விற்பனை பிரிவு அதிகாரிகள் போலீசாரின் உதவியுடன் அந்த கடையில் சோதனை செய்தனர். இதில் அந்த கடையில் விற்பனை செய்யப்பட்ட வேட்டிகள் அனைத்தும் போலியானது என்பது வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த கடையின் உரிமையாளரான ராஜேந்திரன் என்பவரும் அவரது மகன்கள் திலகராஜ், ஜெயப்பிரகாஷ், தமிழரசன் ஆகியோர் ஈரோட்டில் இருந்து 80 ரூபாய் முதல் 100 ரூபாய் விலையுள்ள மலிவான வேட்டிகளை விலைக்கு ஏராளமாக வாங்கி வந்துள்ளனர். அந்த வேட்டிகளை ராம்ராஜ், உதயா, ஆலயா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட முன்னனி நிறுவனங்களின் பெயரில் போலியாக கவர் அச்சடித்து அதில் வைத்து வாடிக்கையாளர்களை ஏமாற்றி விற்றுவந்தது தெரியவந்தது.

செல்வக்குமார் என்பவர் மூலம் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியான கிராபிக்ஸ் டிசைன்களை ஸ்டிக்கராக தயார் செய்து திருநெல்வேலியில் போலி கவர்களை அச்சிட்டு பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. தீபாவளி நெருங்குவதால் தங்கள் கடையில் வேட்டி வாங்கும் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் விதமாக ஏராளமான போலி வேட்டிகளை தயாராக வைத்திருந்ததும் அம்பலமாகியுள்ளது.

இதையடுத்து போலி வேட்டி தயாரிப்பில் ஈடுபட்ட ராஜேந்திரன் அவரது மகன்கள் திலகராஜ், ஜெயப்பிரகாஷ், தமிழரசன், டிசைனர் செல்வக்குமார் ஆகிய 5 பேர் மீது 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

ராம்ராஜ் நிறுவனத்தின் பார்கோடு ரீடருடன் கூடிய ஸ்டிக்கர் இருந்தால் மட்டுமே அது ஒரிஜினல் வேட்டி என்று விளக்கம் அளித்துள்ள அந்த நிறுவனத்தினர், தங்கள் நிறுவன வேட்டியை தொட்டுப்பார்த்தால் ஒரு வித மென்மையான தன்மையை உணரலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments