சீனாவின் படைக்குவிப்பால் பதற்றம்.. கிழக்கு லடாக் எல்லையில் படைத் தளபதி தயார்நிலை பற்றி ஆய்வு
கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீனாவின் படைக்குவிப்பால் பதற்றம் நிலவும் நிலையில், இந்திய விமானப்படைத் தளபதி விவேக் ராம் சவுத்ரி முன்னிலைகளுக்குச் சென்று பார்வையிட்டுப் படையினரின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்தார்.
கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் முன்பிருந்த நிலைகளைத் தாண்டிச் சீன ராணுவம் படையினரைக் குவித்து வருகிறது.
முந்தைய நிலையைப் பராமரிக்க வேண்டும் எனச் சீனாவைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் இந்தியா, சீனாவுக்கு நிகராகப் படையினரைக் குவித்துப் படைக்கலன்களையும் அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில் இன்று லடாக்கில் லேயில் உள்ள விமானப்படைத் தளத்துக்கு இந்திய விமானப்படைத் தளபதி விவேக்ராம் சவுத்ரி சென்றார். விமானப்படை அதிகாரிகளையும் எல்லையில் பணியமர்த்தப்பட்டுள்ள சிறப்புப் படைப் பிரிவினரையும் அவர் சந்தித்துப் பேசியுள்ளார்.
அக்டோபர் முதல் நாள் விமானப்படைத் தளபதியாக அவர் பதவியேற்ற பின் டெல்லிக்கு வெளியே உள்ள படைத்தளத்துக்குச் சென்றது இதுவே முதன்முறையாகும்.
கடந்த ஆண்டு எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டபோது அவர் விமானப்படையின் மேற்கு மண்டலத் தலைவராக இருந்தது குறிப்பிடத் தக்கது.
எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அப்பால் மூன்று விமானப்படைத் தளங்களில் சீனப் படையினர் உள்ளதாகவும், அதைச் சமாளிக்கும் வகையில் இந்தியாவும் படையினரைக் குவித்துத் தயார் நிலையில் உள்ளதாகவும் அக்டோபர் ஐந்தாம் நாள் சவுத்ரி தெரிவித்தார்.
சீனப் படையை மிஞ்சும் அளவுக்கு இந்தியாவும் எல்லையில் ஐம்பதாயிரம் வீரர்களைக் குவித்துள்ளதுடன், கே 9 வஜ்ரா வகை பீரங்கிகளையும் கொண்டு சென்றுள்ளது.
Comments