நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் தரங்குறைந்த தேயிலை; டார்ஜிலிங் தேயிலைத் தோட்டங்கள் மூடப்படும் அபாயம்
நேபாளத்தில் இருந்து தரங்குறைந்த தேயிலை இந்தியாவுக்கு இறக்குமதியாவதால் டார்ஜிலிங்கில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
நேபாளம் - இந்தியா இடையே தடையற்ற வணிக உடன்பாடு உள்ளதால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் தரங்குறைந்த தேயிலையை நேபாளம் இந்தியாவுக்கு அனுப்பி வருவதாகச் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. டார்ஜிலிங் தேயிலை ஒரு கிலோ 360 ரூபாய்க்குக் கிடைக்கும்போது, நேபாளத் தேயிலை அதைவிடப் பாதி விலையில் கிடைக்கிறது.
இதனால் டார்ஜிலிங் தேயிலை விலை கடந்த ஓராண்டில் 20 விழுக்காடு குறைந்து தேயிலைத் தோட்டங்கள் இழப்பால் மூடப்படும் அபாயம் உள்ளதாகவும், நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தத் தொழிலில் உள்ள ஆயிரக்கணக்கானோர் வேலையிழக்கக் கூடும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத் தேயிலை இறக்குமதியைத் தடுக்கக் கோரி டார்ஜிலிங் மாவட்ட நிர்வாகம் தேயிலை வாரியத்துக்கும், மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் கடிதம் எழுதியுள்ளது.
Comments