வாக்கிங் செல்லும் மகளிர் டார்கெட்.. நட்சத்திர ஹோட்டல் ஊழியர் கைது..!

0 5381

சென்னையில் அதிகாலையில் வாக்கிங் செல்லும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பைவ் ஸ்டார் ஹோட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டான். பொதுவெளியில் வக்கிர புத்தியை அரங்கேற்றிய இளைஞன் சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கியது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...

சென்னை அண்ணா நகர் 2-வது பிரதான சாலையில், கடந்த 10-ஆம் தேதி அதிகாலை ஓய்வு பெற்ற ராணுவ வீரர், தனது இரண்டு மகள்களுடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த நபர் ஒருவர் தந்தையின் கண் முன்னே பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவிட்டு வேகமாக தப்பியோடிவிட்டான். அதிர்ச்சியடைந்து அந்த பெண் கூச்சலிட்ட நிலையில், அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை முதலில் புகார் கொடுக்க மறுத்துவிட்டார். ஆனால், அவரை சமாதானம் செய்த காவல்துறையினர் அவரிடம் புகாரை பெற்று, வழக்குப்பதிவு செய்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை தேட தொடங்கினர். அடுத்தகட்டமாக, அந்த நபரின் அருவருக்கக்தக்க ஆபாச லீலைகள் குறித்த சிசிடிவி காட்சிகளையும் போலீசார் கைப்பற்றினர்.

மேலும், இதேபோன்ற புகாரில் கீழ்பாக்கம் போலீசாரும் 4 வழக்குகள் பதிவு செய்து நபர் ஒருவரை தேடி வருவது தெரியவந்தது. இரண்டு சிசிடிவி காட்சிகளையும் ஒப்பிட்டு பார்த்த போது, ஒரே நபர் தான் அதிகாலையில் 5 மணியில் இருந்து 6 மணிக்குள் சாலையில் வாக்கிங் செல்லும் இளம்பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.

பாலியல் சீண்டல் சம்பங்கள் நடந்த இடங்களை வைத்து அந்த நபர் குறிப்பிட்ட வழியாகத்தான் தினந்தோறும் செல்கிறான் என்பதை உறுதி செய்த போலீசார் அவனை பிடிக்க பொறி வைத்தனர். அதிகாலை 5 மணி அளவில் அண்ணா நகரில் இருந்து கீழ்பாக்கம் வரை அந்த நபர் வரும் வழியில் காத்திருந்து, இருசக்கர வாகனத்தில் வந்தவனை சுற்றி வளைத்து பிடித்தனர்.

விசாரணையில், அவன் வில்லிவாக்கம் ஜெகநாதன் நகரைச் சேர்ந்த 20 வயதான தினேஷ் குமார் என்பதும், டெல்லியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வந்த தினேஷ்குமார், பயிற்சிக்காக தற்போது எழும்பூரில் உள்ள நட்சத்திர விடுதியான ராடிசன் ப்ளூ ஹோட்டலில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

காவல்துறையில் பதிவான புகார்கள் மட்டுமல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் இதே போன்ற பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அந்த நபர் விசாரணையில் ஒப்புக் கொண்டிருப்பதையும் போலீசார் சுட்டிகாட்டியுள்ளனர். பாதிக்கப்படும் பெண்கள் நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லவும், புகார் அளிக்கவும் தயங்குவதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட தினேஷ்குமார், பல பெண்களிடம் அத்துமீறி பாலியல் சீண்டல்களை தொடர்ந்துள்ளான்.

இதனையடுத்து, தினேஷ்குமாரை அண்ணா நகர் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் தனிப்படை போலீசார். அவன் மீது பெண்களை மானபங்கம் செய்தது, பெண் வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இதுபோன்று பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்படும் பெண்கள் அச்சப்படாமல் புகாரளிக்கவேண்டும் என அறிவுறுத்தும் போலீசார், புகார் தெரிவிக்கும் பெண்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments