பராமரிப்பின்றி 45 நாய்கள் பலி... ஐஐடி பதிவாளர் மீது புகார்
சென்னை ஐ.ஐ.டி-யில் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்ட 45 நாய்கள் உயிரிழந்ததாக ஐஐடி பதிவாளர் மற்றும் ஊழியர்கள் மீது மிருக வதை தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஐஐடி கல்வி நிறுவன வளாகம் 236 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இங்கு கலை மான்கள், புள்ளி மான்கள், குள்ள நரிகள், காட்டு பூனைகள் உள்ளிட்ட அரிய வகை வன உயிரினங்கள் உள்ளன. மேலும் 40 வகையான வண்ணத்துப் பூச்சிகளும் உள்ளன. ஆனால் ஐஐடியில் ஏற்படுத்தப்படும் சூழலியல் பாதிப்பால் அரிய வகை உயிரிணங்கள் பலியாவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஐஐடி வளாகத்தில் ஒரே இடத்தில் நாய்களை அடைத்து வைத்திருப்பதாக புகார் எழுந்தது. இது போன்று நாய்களை ஒரே இடத்தில் அடைப்பது விலங்குகள் இனப்பெருக்க கட்டுப்பாடு விதிகள் 2001க்கு எதிரானது எனக் கூறி விலங்குகள் நல வாரியம் ஐஐடி பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் ஐஐடி-க்கு எதிராக விலங்கு நல ஆர்வலர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணையில் 186 நாய்களை ஐஐடி வளாகத்திற்குள் ஓரிடத்தில் அடைத்து வைத்திருந்தது உறுதியானது. இதுதொடர்பாக நீதிமன்ற உத்தரவின்படி வழக்கில் ஆஜராகி விளக்கமளித்த ஐஐடி பதிவாளர், வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த நாய்களில் 45 நாய்கள் குறிபிட்ட காலகட்டத்தில் உயிரிழந்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், பெங்களூரைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலரான ஹரிஷ் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் கடந்த 2020-ஆம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி-யில் அடைத்து வைக்கப்பட்ட 186 நாய்களில் 45 நாய்கள் உயிரிழந்ததற்கு உரிய பராமரிப்பு அளிக்கத் தவறிய பதிவாளர் ஜேன் பிரசாத் மற்றும் உடனிருக்கும் சில ஊழியர்களே காரணம் எனவும் அவர்கள் மீது மிருகவதை தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இது தொடர்பான வழக்கில் ஐஐடி வளாகத்தில் உள்ள தெரு நாய்களை மீட்டு கால்நடை மருத்துவமனையில் பராமரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments