கொள்ளையடித்த பணத்தில் ரூ.1 லட்சத்திற்கு பேசியல்.. பலே பாண்டுரங்கா..!
கருப்பு பணம் வைத்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை குறி வைத்து கொள்ளையடிக்கும் நூதன கொள்ளையனை சென்னை கீழ்ப்பாக்கம் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். நட்சத்திர விடுதியில் அறை எடுத்து தங்கி, முகத்திற்கு மெருகூட்ட பேசியலுக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்த கொள்ளையன் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் தொழில் அதிபர் ஆசிஷ் பன்சால். இவருக்குச் சொந்தமாக ஆந்திரா மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் வாகன பேட்டரிகளுக்கான அலுமினிய லெட் தயாரிக்கும் pondy oxides and chemicals ltd என்ற தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைக்கான தலைமை அலுவலகம் சென்னை சேத்துப்பட்டில் உள்ள பிரபல வணிக வளாகத்தின் 4ஆவது மாடியில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி இந்த அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோ லாக்கரில் இருந்த 72 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனது.
இது தொடர்பான புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கீழ்ப்பாக்கம் உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்ததில் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு ஒரு நபர் பையுடன் நடந்து சென்று பின் ஆட்டோவில் ஏறிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
அந்த நபர் சென்ற வழித் தடங்களில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்ததில், திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த விடுதிக்குச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அந்த நபர் திருநெல்வேலி மாவட்டம் பிள்ளையார்நத்தம் பகுதியைச் சேர்ந்த 57 வயதான பாண்டுரங்கன் என்பதும், அவர் அன்று அதிகாலை தான் விடுதியை காலி செய்துவிட்டு சென்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து விடுதியில் அவன் அளித்த செல்போன் நம்பரைப் பெற்று அவனது இருப்பிடத்தை ஆய்வு செய்தபோது தியாகராய நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் சூட் ரூமில் தங்கியிருந்தது உறுதியானது. அப்போது நள்ளிரவு நேரம் ஆகி விட்டதால், அருகிலேயே காவல்துறையினர் மற்றொரு அறையில் விடியும் வரை காத்திருந்தனர்.
நட்சத்திர ஓட்டலில் பாண்டுரங்கன் தங்கியிருக்கும் தளத்தில் மட்டும் மின்சாரத்தை துண்டித்தனர். பின் சினிமா பாணியில் நட்சத்திர விடுதியின் ஊழியர் ஒருவரை காலை 5.30 மணிக்கு காபி எடுத்து செல்லுமாறு தெரிவித்தனர். காப்பி கொடுக்க வந்ததாக ஊழியர் தெரிவித்ததை அடுத்து அறை கதவின் கேமரா மூலம் பாண்டுரங்கன் பார்த்துள்ளார்.
போலீசார் யாரும் இல்லை, காபியுடன் ஊழியர் நிற்கிறார் என நினைத்து திறக்கும்போது அதிரடியாக போலீசார் உள்ளே நுழைந்து பாண்டுரங்கனை கைது செய்துள்ளனர். திடீரென நுழைந்து கைது செய்ய முயன்றால் பால்கனி மாடி ஜன்னல் வழியாக குதித்து தப்பிக்க முயன்று விபரீதமாக நடக்க வாய்ப்பு இருந்ததன் அடிப்படையில் போலீசார் இந்தத் திட்டத்தைத் தீட்டி கைது செய்தனர்.
தன்னை யாரும் எளிதில் அடையாளம் கண்டு விடக்கூடாது என்பதற்காக கொள்ளையடித்த பணத்தில் ஒரு லட்ச ரூபாயை செலவிட்டு பேசியல் செய்து கொண்டதாகவும் பாண்டுரங்கன் வாக்குமூலம் அளித்துள்ளான். பேசியல் செய்ததற்கான ரசீதுகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பாண்டுரங்கனை கைது செய்து, அவன் செலவு செய்த பணம் போக அறை லாக்கரில் பூட்டி வைத்திருந்த சுமார் 61 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
பழைய குற்றவாளியான பாண்டுரங்கன் மீது 1981 ஆம் ஆண்டு எழும்பூர் காவல் நிலையத்தில் 16 வழக்குகள் பதியப்பட்டுள்ளதும், இறுதியாக 2013 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொள்ளையடித்து சிறை சென்றதும் தெரியவந்துள்ளது. அதன்பின் சொந்த ஊரில் விவசாயம் செய்து வந்த நிலையில், கடன் தொல்லையால் கடந்த ஒரு மாதமாக சென்னைக்கு வந்து அறையெடுத்து தங்கி கொள்ளையில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளான். இதனையடுத்து கைது செய்யப்பட்ட பாண்டுரங்கனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Comments