ஓட்டு போடலன்னா கதவை உடைப்போம் இது தான் கம்யூனிசமா ? வழக்கறிஞர் பரபரப்பு புகார்

0 5557

கள்ளக்குறிச்சி அடுத்த திருகோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ஆத்திரத்தில்  கம்யூனிஸ்ட் வேட்பாளரரின் கணவர் மற்றும் ஆதரவாளர்கள் , எதிர்த்து தேர்தல் வேலை செய்த வழக்கறிஞர் ஒருவரது வீட்டுக்கதவை சிலிண்டரை தூக்கி அடித்து உடைத்து ரகளை செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது

வீட்டுக்குள் சிக்கிக் கொண்ட யாரையோ காப்பாற்றுவதற்காக கதவை உடைக்க முயற்சிப்பதாக நினைக்க வேண்டாம் தேர்தலில் தோல்வி அடைந்த விரக்தியில் தோழர்கள் சிலர் வெற்றி பெற்றவரின் ஆதரவாளரான வழக்கறிஞர் வீட்டில் செய்த ரகளைதான் இது..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் தனகனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளராக உள்ள நிலையில் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தின் 15 வது வார்டில் ராமசாமியின் மனைவி அலமேலு என்பவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளராகவும், தனகனந்தல் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு கோவிந்தசாமியும் போட்டியிட்டனர்.

அந்த ஊர் முழுவதும் கட்டுப்பாடுடன் இருவருக்கும் ஆதரவாக வாக்கு சேகரித்த நிலையில் அலமேலு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கோவிந்தசாமியும் தோற்றார்.

அலமேலுவை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வெற்றிபெற்றதால் ஆத்திரம் அடைந்த கம்யூனிஸ்டு இயக்க தோழர்கள் ராமசாமி மற்றும் கோவிந்தசாமி ஆகியோர் தங்களுக்கு எதிராக தேர்தல் வேலை செய்த வழக்கறிஞர் செம்மலை என்பவரை தாக்குவதற்காக கும்பலாக வீட்டுக்கு சென்றனர்.

வழக்கறிஞர் செம்மலை கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு வீட்டுக்குள் இருந்த நிலையில் ராமசாமியின் மகன் அங்கிருந்த சிலிண்டரை தூக்கி கதவை உடைத்தான். கதவில் விழுந்த ஓட்டை வழியாக வழக்கறிஞரை தாக்க முயன்றார்

இந்த ரகளை சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்த நிலையில் தன் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும், கொலை மிரட்டல் குறித்தும் வழக்கறிஞர் செம்மலை, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து ராமசாமி அவரது மனைவி அலமேலு, லெனின் உள்ளிட்ட 3 மகன்கள் என ஒட்டு மொத்தமாக 13 பேர் மீது ஜாமீனில் வெளிவர இயலாத பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை தேடி வருகின்றனர்.

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன் என்று வாக்கு சேகரித்தவர் கூப்பிடாமலேயே வீட்டுக்கு வந்து குரலை உயர்த்தி குடும்பத்தோடு வழக்கில் சிக்கிய சம்பவம் திருக்கோவிலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments