முந்திரித் தொழிற்சாலை ஊழியர் கொலை வழக்கு: எம்பி ரமேசை அக்டோபர் 27 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு
முந்திரி ஆலைத் தொழிலாளர் கொலை வழக்கில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷை அக்டோபர் 27 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முந்திரி ஆலைத் தொழிலாளர் கோவிந்தராஜை அடித்து, விஷம் ஊற்றிக் கொன்றதாக ஆலை உரிமையாளரும் கடலூர் எம்பியுமான ரமேஷ் மற்றும் 5 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
திங்களன்று பண்ருட்டி நீதிமன்றத்தில் ரமேஷ் சரணடைந்தார். சிறையில் அடைக்கப்பட்ட அவரைக் கடலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிபிசிஐடி காவல்துறையினர், 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். ஒரு நாள் மட்டுமே அனுமதி கிடைத்த நிலையில், சிபிசிஐடி அலுவலகத்தில் கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளர் கோமதி மற்றும் ஆய்வாளர்கள் மூவர் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அதையடுத்து மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அக்டோபர் 27 வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து ரமேஷைக் கடலூர்ச் சிறையில் அடைத்தனர்.
Comments