தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் களேபரங்கள்..!

0 2080

தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் போது பல இடங்களில் மோதல்,சாலைமறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

விராச்சிலை ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி...

புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலை ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் வெற்றி பெற்றார். இதனை அடுத்து 25 ஆண்டுகளுக்கு பிறகு முதல் வெற்றியை ருசித்த வேட்பாளருக்கு மாலை அணிவித்த திமுகவினர் அவரை தோளில் தூக்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

சங்கரன்கோவில் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெற்றி...

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் ஒன்றியத்திற்குட்பட்ட பெருங்கோட்டூர் ஊராட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ஓரணியாக நின்று 15ஆண்டுகளுக்கு பிறகு இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து அனைவரும் ஆனந்த கண்ணீர் வடித்தும் ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்தும் வாழ்த்துக்களை பரிமாறினர்.

எடப்பாடி ஒன்றியத்தில் திமுக - அதிமுகவினர் இடையே மோதல்...

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் தாதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் திமுகவைச் சேர்ந்த அரசி மாதையன் மற்றும் அதிமுக சார்பில் வளர்மதி வேலு ஆகியோர் போட்டியிட்டனர். நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் அதிமுகவைச் சேர்ந்த வளர்மதி வேலு 92 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் அதிமுகவினரை தாக்கியதில் 6பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காணை ஒன்றியத்தில் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு சான்றிதழ் வழங்கவில்லை..வேட்பாளரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்...

விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சான்றிதழ் வழங்காததால் வேட்பாளரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கானை ஒன்றியத்திற்குட்பட்ட கடையம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் விஜயகுமார் என்பவர் 85 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை இரவு வரை வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அச்சம் அடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் திருவண்ணாமலை - விழுப்புரம் சாலையில் கண்டச்சிபுரம் மும்முனை சந்திப்பில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

காட்பாடி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வெற்றி அறிவிப்பதில் தாமதம்.. அதிமுக ஆதரவு வேட்பாளரின் உறவினர்கள் சாலைமறியல்...


வேலூர் மாவட்டம் காட்பாடி வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுக ஆதரவு வேட்பாளர் வெற்றியை அறிவிப்பதில் தாமதமானதால் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. காட்பாடி ஒன்றியத்தில் சட்டக்கல்லூரியில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிகை மையத்தில் சேனூர் ஊராட்சிக்கு திமுக ஆதரவு பெற்ற வேட்பாளரும் அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளரும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட அதிமுக ஆதரவாளர் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் தேர்தல் அலுவலரை தாக்கிய திமுக வேட்பாளர்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரை திமுகவினர் தாக்கினர். ரிஷிவந்தியம் ஒன்றியதில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் அரியலூர் அரசு பள்ளியில் எண்ணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 12வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் திமுக வேட்பாளர் பெருமாள் தேர்தல் நடத்தும் அலுவலர் அதிமுகவுக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

அதிமுகவுக்கு பதில் திமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் போராட்டம்...

விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஒன்றியத்தில் உள்ள ஒன்றிய கவுன்சிலர் வெற்றி வேட்பாளரின் பெயர் மாற்றி அறிவிக்கப்பட்டது. கண்டாச்சிபுரம் 6 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட மீனா குமாரி என்பவரை விட அதிமுக வேட்பாளர் கலைமதி சுந்தர் என்பவர் 104 வாக்குகள் அதிகம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிகாலை 4 மணியளவில், வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளருக்கு பதில் திமுக வேட்பாளர் கலைமதி சுந்தர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அதிமுக வேட்பாளரின் ஆதரவாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments