"காசு கொடுத்தா உசுர காப்பாத்துவேன்"... கறார் காட்டிய அரசு பெண் மருத்துவர்..!

0 9937
"காசு கொடுத்தா உசுர காப்பாத்துவேன்"... கறார் காட்டிய அரசு பெண் மருத்துவர்..!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர் ஒருவர் கர்ப்பிணியின் வயிற்றுக்குள்ளேயே உயிரிழந்த சிசுவை உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அகற்றாமல் வலியோடு துடிக்க வைத்து, பின் தாம் பணிபுரியும் தனியார் மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்து அறுவை சிகிச்சை செய்த கொடுமை அரங்கேறி இருக்கிறது. 

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா, காரத்தொழுவை சேர்ந்தவர் ராஜராஜேஸ்வரி. கடந்த மாதம் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜ ராஜேஸ்வரியை கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு வயிற்று வலி ஏற்படவே,
உடுமலை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு, உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

உடுமலை அரசு மருத்துவமனையில் இராஜைராஜேஸ்வரியை பரிசோதித்த ஜோதிமணி என்ற மருத்துவர் சிசு வயிற்றிலேயே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார். ஆனால் இறந்த சிசுவை உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அகற்றாமல் 4 நாட்களாக காலதாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் வலியால் துடித்த இராஜராஜேஸ்வரி, உடனடியாக குழந்தையை அகற்றுமாறு கேட்டபோது, அருகிலுள்ள ஸ்ரீவிநாயக் மெடிக்கல் செண்டர் என்ற தனியார் மருத்துவமனைக்கு மருத்துவர் ஜோதிமணி பரிந்துரைத்தார் என்று கூறப்படுகிறது.

வேறு வழியின்றி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மருத்துவர் ஜோதிமணியே அங்கு அறுவை சிகிச்சை செய்ய வந்ததைக் கண்டு குழப்பம் அடைந்துள்ளனர் ராஜராஜேஸ்வரி குடும்பத்தினர். அப்போதுதான், அந்த மருத்துவமனையில் தனக்கென அறை ஒன்றை வைத்துக் கொண்டு பகுதி நேரமாக ஜோதிமணி மருத்துவம் பார்த்து வருவது தெரியவந்துள்ளது. 35 ஆயிரம் ரூபாயை கட்டணமாக செலுத்தினால், உடனடியாக வயிற்றில் இறந்து கிடக்கும் குழந்தையை அகற்றுவதாக மருத்துவர் ஜோதிமணி கூறியதாகச் சொல்லப்படுகிறது.

இந்த அறுவை சிகிச்சையை அரசு மருத்துவமனையிலேயே செய்திருக்கலாமே என ராஜராஜேஸ்வரி குடும்பத்தார் கேட்டபோது, அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா, வேண்டாமா என அவர் அலட்சியமாகக் கேட்டதாக அவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். வலியோடு போராடும் இராஜராஜேஸ்வரியின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிர்பந்தத்தில் வேறு வழியின்றி பணத்தை செலுத்தியதும் அறுவை சிகிச்சையும் உடனடியாக நடந்துள்ளது.

அரசு மருத்துவர் ஜோதிமணியின் இந்த செயல் குறித்து சமூக வலைதளத்தில் இராஜராஜேஸ்வரியின் உறவினர்கள் செய்தி பரப்பவே, அது மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குச் சென்றுள்ளது. இதனையடுத்து, முதற்கட்டமாக மருத்துவர் ஜோதிமணியை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியரின் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

நாள்தோறும் லட்சக்கணக்கான நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றி வரும் அர்ப்பணிப்பு உள்ளம் கொண்ட ஆயிரக்கணக்கான அரசு மருத்துவர்களுக்கு நடுவே, இதுபோன்ற பணத்தாசை பிடித்த மருத்துவர்களும் இருப்பது துரதிஷ்டவசமானது என பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments