700 அடி உயர மலை உச்சியில் சூசைடு தர்ணா செய்த தம்பி.. புத்தி சொல்லி மீட்ட தீயணைப்புதுறை..!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே சாதியை ஒழிக்க வேண்டும் எனவும், ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கையில் வேல் ஏந்திய படி 700 அடி உயர மலையில் ஏறி தற்கொலை மிரட்டல் போராட்டம் நடத்தியவரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். பாறையின் சூடு தாங்காமல், சூசைடு போராட்டத்தை கைவிட்ட காரியக்கார தம்பி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
ஞானப்பழத்துக்காக கோபித்துக் கொண்டு சென்றது போல கையில் வேலுடன் இருக்கும் இவர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த தேனிமலை கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சண்முகம் ..!
மேலச்சிவபுரியில் உள்ள கல்லூரியில் படித்து வரக் கூடிய சண்முகம், சுமார் 700 அடி உயரம் உள்ள தேனிமலை முருகன் கோயில் மலை உச்சியில் அமர்ந்து தற்கொலை மிரட்டல் விடுத்தார். இவரது கோபத்துக்கு ஞானப்பழம் காரணம் அல்ல, தமிழகத்தில் ஜாதியை ஒழிக்க வேண்டும்..! மதுக்கடைகளை மூடவேண்டும்..! சீமை கருவை மற்றும் தைலமரங்களை அகற்ற வேண்டும்..! ஆழ்துளை கிணறுகள் அமைப்பதை தடுக்க வேண்டும்..! உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்து தற்கொலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தனது கோரிக்கையை நிறைவேற்றாமல் யாராவது தன்னை மீட்க மலையின் மீது ஏறிவந்தால் குதித்து தற்கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டல் விடுத்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டள்ளது. ஏராளமானோர் மலையை சுற்றி கூடினர். அவரை மலை உச்சியில் இருந்து பத்திரமாக இறக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.
அவரது உறவினர்களும் , நண்பர்களும் அவரை கீழே இறங்கச்சொல்ல மாவட்ட ஆட்சித்தலைவர் வந்து தனது கோரிக்கைகளை நிறைவேற்றித்தருவதாக வாக்குறுதி தந்தால் தான் கீழே இறங்குவேன் இல்லையேல் மலையில் இருந்து குதித்து உயிரைமாய்த்துக் கொள்வேன் என்று பூச்சாண்டி காட்டி வந்தார்.
அவரது கோரிக்கைகள் சிறப்பானவை தான்... ஆனால் அவை நடைமுறைக்கு சாத்தியப்பட்டு வராது என்று தீயணைப்புத்துறையினர் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும்., அங்குள்ள பாறையில் அமர்ந்திருந்த சண்முகம் ஒரு கட்டத்தில் சூடு தாங்க இயலாமல் எழுந்து நடக்க தொடங்கினார்.
அதற்குள்ளாக தீயணைப்பு வீரர்கள் சிலர், சண்முகம் தவம் செய்த மலையின் உச்சிக்கு சென்றுவிட்டனர். அவரிடம் தம்பி கீழே வந்தால் மாவட்ட ஆட்சி தலைவரிடம் கூட்டி செல்கிறோம் அவரிடம் நேரடியாக உங்கள் கோரிக்கையை தெரிவிக்கலாம் என்று கூறி அவரை சமாதனப்படுத்தி பத்திரமாக கீழே அழைத்து வந்தனர்.
இடஒதுக்கீட்டில், கல்லூரியில் படித்து வரும் சண்முகத்திடம் நீ ஏன் கல்லூரியில் சேர்வதற்கு சாதியை பயன்படுத்தினாய் என்று தீயணைப்புத்துறை அதிகாரி கேட்க, அந்த தம்பியோ இனி பயன்படுத்த மாட்டேன் என்று சமாளித்தார்.
அடுத்ததாக உங்கள் வீட்டில் ஆழ்துளை கிணறு இருக்கின்றதா? என்று கேட்க, தம்பி ஆமாம் என்றதும், ஆவேசமான அந்த அதிகாரி முதலில் உன் வீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கும் போது குறுக்கே விழுந்து தடுத்து இருக்க வேண்டும்., அதைவிடுத்து ஊருக்குள் போர்வெல் அமைக்க கூடாது என்று மலைமேல ஏறி உட்காந்து பிரச்சனை பண்ணிகிட்டு இருக்கிறாய். உனக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறி அந்த மிரட்டல் தம்பியை 108 ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தார்.
கருவாட்டில் இருந்து காப்படி ரத்தம் வேண்டும்..! கொசுவிடம் இருந்து கால் கிலோ எலும்பு வேண்டும்..! இப்படியெல்லாம் கோரிக்கை வைத்தால் அதிகாரிகளும் என்னதான் செய்வார்கள் என்று கமெண்ட் அடித்துக் கொண்டே கூடியிருந்தவர்கள் கலைந்து சென்றனர்..!
Comments