வசூல் வேட்டைக்கு தயாராகும் கலெக்சன் சாமிக்கு பூச்சாட்டு..! புரோக்கர்கள் கொண்டாட்டம்

0 4006
வசூல் வேட்டைக்கு தயாராகும் கலெக்சன் சாமிக்கு பூச்சாட்டு..! புரோக்கர்கள் கொண்டாட்டம்

கடலூரில் இருந்து கும்பகோணத்திற்கு மீண்டும் வட்டாரப் போக்குவரத்து அலுவலராக இடமாறுதல் பெற்றுச்சென்ற அதிகாரிக்கு, அர்ச்சகர்கள் பரிவட்டம் கட்ட, ஆளுயர மாலை போட்டு, மலர்தூவிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

வேட்டைக்கு சென்று வந்த கருப்பசாமிக்கு மாலை போட்டு மலர்தூவி வரவேற்பது போன்று தடபுடலாக வரவேற்கப்படும் இவர் வேறு யாருமல்ல, கடலூரில் புரோக்கர்களுக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டிபோஸ்டர் ஒட்டப்பட்டதால் இடமாற்றம் செய்யப்பட்ட வட்டார போக்குவரத்து அதிகாரி முக்கண்ணன் தான்..!

கடலூரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலராக பதவி வகித்து வந்த முக்கண்ணன் புரோக்கர்களுடன் கூட்டணி அமைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை திறம்பட செயல்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது. இவர் மீது குற்றஞ்சாட்டி கடலூரில் போஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில், முக்கண்ணனை ரொம்ப நல்லவர் என்று புகழ்ந்து ஒரு தரப்பினர் எதிர் போஸ்டர் ஒட்டினர்.

இந்த நிலையில், முக்கண்ணன் தன் செல்வாக்கை பயன்படுத்தி தான் ஏற்கனவே கடந்த 2012 முதல் 2016 ஆம் ஆண்டு வரை 'சிறப்பாகப்' பணியாற்றிய கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு இடமாறுதல் பெற்றதாக கூறப்படுகின்றது. முக்கண்ணன் திரும்ப வந்து விட்டார் என்ற தகவல் அறிந்ததும், புரோக்கர்களும், அவரது உதவியாளர்களும் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்ததாகக் கூறப்படுகிறது.

கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகம் பட்டீஸ்வரத்தில் அமைந்துள்ளதால், அங்குள்ள துர்க்கை அம்மன் கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர் ரமேஷ் தலைமையில் மூன்றுக்கும் மேற்பட்ட அர்ச்சகர்களும் ஊழியர்களும் கும்பகோணம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் முக்கண்ணனை சந்தித்து துர்க்கை அம்மனுக்கு சாற்றப்பட்ட பல்வேறு மலர் மாலைகளை எடுத்து சென்று முக்கண்ணனுக்கு  பரிவட்டம் கட்டி ஆளுயர மாலைகளை அணிவித்து மந்திரங்கள் முழங்கியபடி அவருக்கு மலர் அபிஷேகம் செய்துள்ளனர்.

அரசு ஊழியராகத் தனது கடமையை ஆற்ற வேண்டிய வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு வரவேற்பு என்ற பெயரில், மாலை அணிவித்து மலர் அபிஷேகம் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments