ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான மோதலில் ராணுவத்தினர் 5 பேர் வீரமரணம்
ஜம்மு-காஷ்மீரில், தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு ராணுவ அதிகாரி மற்றும் 4 வீரர்கள் என 5 பேர் வீரமரணமடைந்தனர்.
பூஞ்ச் மாவட்டத்தில் சுரான்கோட் பகுதியில், ஒரு கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலின்பேரில், பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். மறைந்திருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டதை அடுத்து, இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டுள்ளது.
இதில் ஒரு இளநிலை அதிகாரி மற்றும் 4 வீரர்கள் உயிருக்கு ஆபத்தான முறையில் படுகாயமடைந்தனர். பின்னர் சிகிச்சை பலனின்றி 5 பேரும் உயிரிழந்தனர். எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியே, ஏராளமான ஆயுதங்களுடன் ஊடுருவிய தீவிரவாதிகள் சாம்ரர் வனப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், சம்மந்தப்பட்ட பகுதிகளில் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
எப்பகுதி வழியாகவும் தீவிரவாதிகள் தப்பி விடக்கூடாது என்பதால், நாலாபுறமும் சுற்றி வளைத்துள்ள வீரர்கள், தொடர்ந்து துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, இன்று காலை வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டைகளில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் போலீஸ்காரர் ஒருவரும் காயமடைந்தார்.
Comments