முந்திரி ஆலை தொழிலாளர் கொலை வழக்கு - கடலூர் எம்.பி ரமேஷ் நீதிமன்றத்தில் சரண்
முந்திரி பருப்பு ஆலை தொழிலாளி கோவிந்த ராஜ் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்டு வந்த கடலூர் எம்.பி. ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 3 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.
கடலூர் எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி பருப்பு ஆலை, பண்ருட்டி அருகில் பணிக்கன் குப்பம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. அங்கு வேலை செய்த கோவிந்தராஜ் என்ற தொழிலாளி கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி இரவு மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரை எம்.பி. ரமேசும், அவரது ஆட்களும் தாக்கிக் கொலை செய்துவிட்டதாக எழுந்த புகாரில் வழக்கு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
ஏடிஎஸ்பி கோமதி தலைமையில் கடந்த 28ஆம் தேதி விசாரணை தொடங்கியது. இதைத் தொடர்ந்து, கோவிந்தராஜ் அடித்து, விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டதாக வழக்குப் பதிவு செய்த சிபிசிஐடி போலீசார், திமுக எம்பி ரமேஷ் மற்றும் அவரது ஊழியர்கள் 5 பேரை வழக்கில் எதிரிகளாக சேர்த்தனர். எம்.பி. ரமேஷின் உதவியாளர் உட்பட ஊழியர்கள் 5 பேர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், ரமேஷ் தலைமறைவானார்.
இந்நிலையில், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் நீதிமன்ற நடுவர் கற்பகவல்லி முன்னிலையில் சரண் அடைந்தார். அவரை 3 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி, மீண்டும் 13ஆம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
இதையடுத்து ரமேஷை சிபிசிஐடி போலீசார் கைது செய்து, மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு கடலூர் கிளை சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர். எம்.பி. ரமேஷை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Comments