தங்கத்துக்குப் பதில் பித்தளை.. பஞ்சாயத்து வேட்பாளரின் தகிடுதத்தம்.. கொந்தளிக்கும் வாக்காளர்கள்...!
வாக்குப்பதிவு அன்று தங்க நாணயம் எனக் கூறி பித்தளை நாணயத்தைக் கொடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளர் ஏமாற்றிவிட்டதாகக் கூறி, மறுதேர்தல் கேட்கும் கூத்து அரங்கேறியுள்ளது. பொன்னான வாக்கை பொருளுக்கோ, பணத்துக்கோ அடகுவைத்தால் என்னாகும் என்பதற்கு சாட்சியாக அரங்கேறியுள்ளது இந்த சம்பவம்....
சென்னையை அடுத்த குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை நடந்தது. 2500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள கொழுமணிவாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு கட்சி மற்றும் சுயேட்சை சார்பில் பலர் போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவின் போது ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட ஒரு தரப்பினர், வாக்காளர்களுக்கு தங்க நாணயங்களை கொடுத்ததனர் என்று கூறப்படுகிறது. அந்த நாணயங்களை வாங்கியவர்கள் அவற்றை அடகு வைக்கச் சென்றபோதுதான் அவை பித்தளை என தெரியவந்ததாகக் கூறுகின்றனர்.
வாக்குப் பதிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கொடுத்தால் தெரிந்துவிடும் என சரியாக வாக்குப்பதிவு நாளன்று, வாக்காளர்களை மறைவாக அழைத்து, நாணயங்கள் விநியோகம் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் வேறு ஒருவருக்கு வாக்களிக்க சென்று மனம் மாறி, நாணயம் கொடுத்தவர்களுக்கு வாக்களித்து விட்டதாக சிலர் கொந்தளிக்கின்றனர்.
நூதன முறையில் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி, அங்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். எதிர் தரப்பினர் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்க உள்ளதாகக் கூறியுள்ளனர்.
வாக்குக்குப் பணமோ, பொருளோ கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம் என சட்டம் தெளிவாகச் சொல்கிறது. ஆனால் அதுகுறித்து எந்த கவலையும் படாமல் மதிப்புமிக்க வாக்கை அடகுவைத்தால், என்ன மாதிரியான விளைவுகள் நேரும் என இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.
Comments