100 சவரன் நகை, ஸ்கோடா கார் போதாதாம்.! மனைவியை அடித்தேக் கொன்ற கணவன்.?

0 6329

கோவையில் 100 சவரன் நகை, ஸ்கோடா கார் உட்பட லட்சக்கணக்கில் பணத்தையும் வரதட்சனையாக வாங்கி கொட்டிக் கொண்ட மாடலிங் போட்டோகிராபர் மாப்பிள்ளை, குடும்பத்தினருடன் சேர்ந்து கூடுதல் வரதட்சனை கேட்டு மனைவியை அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் நெசவாளர் காலனியைச் சேர்ந்த அண்ணாதுரை பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மூத்த மகள் இலக்கியா பி.டெக் பட்டதாரி ஆவார். இலக்கியாவுக்கும், கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த சரவணன் - ஜெயந்தி தம்பதியின் மகனான மாடலிங் போட்டோகிராபர் ராம்பிரகாஷுக்கும் பெரியோர்கள் நிச்சயிக்கப்பட்டபடி கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடந்துள்ளது.

மாப்பிள்ளை வீட்டில் கேட்டபடி, 100 சவரன் நகையோடு, ஸ்கோடா காரும் அண்ணாதுரை வரதட்சனையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. பல கனவுகளோடும், எதிர்பார்ப்புகளுடனும் திருமண வாழ்க்கையை தொடங்கிய இலக்கியாவுக்கு, அந்த வாழ்க்கை நினைத்தபடி அமையவில்லை என கூறப்படுகிறது.

திருமணமான சில மாதங்களிலேயே அவ்வப்போது காசு கேட்பதும், கூடுதலாக வரதட்சனை கேட்பதும் என ராம்பிரகாஷும், அவரது தாய், தந்தையரும் இலக்கியாவுக்கு குடைச்சல் கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது.

ஆனாலும், மகளின் வாழ்க்கையே முக்கியம் என நினைத்த அண்ணாதுரை, சமீபத்தில் கூட டியோ பைக் வாங்க ஒரு லட்சம் ரூபாய் பணம் மாப்பிள்ளை வீட்டுக்கு கொடுத்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் கணவனின் கொடுமை தாங்காமலும், அவன் அடித்து துன்புறுத்தியதாலும் கோபித்துக் கொண்டு இலக்கியா பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதனையடுத்து, அவரது தந்தை சமாதானப்படுத்தி, கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என வற்புறுத்தி மீண்டும் அங்கு அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து, கோவை ராமநாதபுரம் பகுதியில் ராம்பிரகாஷும், இலக்கியாவும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்திருக்கின்றனர்.

தனிக்குடித்தனம் போனதில் இருந்து ராம்பிரகாஷின் ஆட்டம் அதிகரித்துள்ளது. குடும்பத்தினருடன் பேசக் கூடாது என இலக்கியாவுக்கு கட்டளையிட்டு, துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சனிக்கிழமை மதியம் அண்ணாதுரை மகள் இலக்கியாவுக்கு போன் செய்யவே, போனை யாரும் எடுக்கவில்லை. சில மணி நேரம் கழித்து அந்த போனில் இருந்து மீண்டும் அண்ணாதுரைக்கு அழைத்த ராம்பிரகாஷ், உங்கள் பிள்ளை தூக்கில் தொங்குது எனக் கூறிவிட்டு அழைப்பை துண்டித்திருக்கிறான்.

இதனை கேட்டு பதறியடித்துக் கொண்டு இலக்கியாவின் பெற்றோர் வீட்டுக்கு வந்த நிலையில், அறையில் இலக்கியா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

தனது மகளின் உடல் மற்றும் உதட்டில் காயங்கள் இருந்ததாகவும், தனது மகளை வரதட்சனை கேட்டு ராம்பிரகாஷ் குடும்பத்தினருடன் சேர்ந்து அடித்து துன்புறுத்தி கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாகவும் போலீசில் புகாரளித்துள்ளனர்.

புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகாததால் ஆர்.டி.ஓ.விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments